செல்வராகவன் சொல்லும் பேய்க்கதை… ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் எப்படி?

entertainment

கற்பழித்துக் கொலை செய்யப்படும் பெண் ஒருவர் பேயாக வந்து பழிவாங்கும் வழக்கமான பேய்ப் படக் கதைக்குள் செல்வராகவன் செய்திருக்கும் மேஜிக் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் களம்!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. நான்கு வருடத்துக்கு முன்பே தயாராகிவிட்ட இப்படம், பல்வேறு போராட்டங்களைத் தாண்டி ஒருவழியாக இன்று வெளியாகிவிட்டது. தனித்துவமான இயக்குநர்கள் பேய்ப் பட ஜானரைக் கையில் எடுத்தால் கொஞ்சம் எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ளும். மிஷ்கின் பிசாசு எடுத்தபோது இருந்த உணர்வு தான், செல்வராகவனின் இந்தப் பட ரிலீஸின் போதும் ரசிகர்களுக்கு இருந்தது. ஆக, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் எப்படி இருக்கிறது?

புதுப் பணக்காரர் ராமசாமி @ ராம்சே (எஸ்.ஜே.சூர்யா) வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வருகிறார் மரியம் (ரெஜினா). எதைப் பற்றியும் கவலைப் படாத பரம்பரைப் பணக்கார வீட்டுப் பெண்ணாக ராம்சேவின் மனைவி ஸ்வேதா (நந்திதா). மரியமை பார்த்ததும் காதலில் விழுகிறார் ராம்சே. எப்படியாவது மரியமை அடைய நினைக்கிறார். அதற்காக, மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு மரியத்தை கற்பழித்துக் கொலைசெய்துவிடுகிறார். பேயாக மாறும் மரியம் என்ன செய்தார், ராம்சே என்னவானார் என்பதே திரைக்கதை.

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருக்கும் வழக்கமான ஒரு கதை. எளிமையான இந்தக் கதைக்குள் செல்வராகவன் செய்திருக்கும் விஷயங்கள், படத்தை புதுமையாக்குகிறது. அதோடு, வேறு ஒரு இடத்திற்கு படத்தைக் கொண்டு சென்றுவிடுகிறது. அழகான நாயகிகளை முகமெல்லாம் கோரமாக்கி அலைய விடவில்லை. பேய் பழிவாங்க நாயகர்கள் உதவி செய்யவில்லை. பேய் ஓட்டுவதற்காக பூசாரியோ, நம்பூதரியோ கிளம்பி வரவில்லை. பயமூட்டுவதற்காக திகில் காட்சிகள் இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி ஒன்றைச் செய்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

நான்கு ஆண்டுக்கு முன்பே உருவாகிவிட்டதால் திரைக்கதை அப்டேட்டாக இருக்காதோ என அச்சம் ரசிகர்களுக்கு வரலாம். ஆனால், இது செல்வராகவன் படம். காலங்கள் கடந்தாலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் புதுசாகவே தெரிகிறது. இயக்குநராக செல்வராகவனுக்கு புதிய முயற்சி. எளிய மனிதர்களை திரைக்குள் கொண்டுவந்துப் பழகியவர், கொஞ்சம் கற்பனையோடு மேஜிக் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

எஸ்.ஜே. சூர்யா இல்லையென்றால் இந்தப் படம் முழுமையடைந்திருக்காது. சீனுக்கு சீன் முகபாவனையில் வெரைட்டிக் காட்டுகிறார். குரல், உடல்மொழி, சிரிப்பது, நடனம் என அனைத்திலும் வெற லெவல். படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவா? வில்லனா? படத்தைப் பாருங்கள்… தெரிந்துகொள்ளுங்கள்!

நந்திதா, ரெஜினா என இரண்டு நாயகிகள் கச்சிதமாகப் படத்தில் பொருந்துகிறார்கள். பணக்காரத் திமிருடன் வரும் நந்திதாவின் சேஞ்ச் ஓவர் நடக்கும் அந்த இடம் எதிர்பார்க்காத ஒன்று. அதுபோல, மென்மையாக அன்பைப் பொழியும் தேவதையாக ரெஜினா க்ளாஸ்.

படத்தில் மொத்தமே 7 கதாபாத்திரங்கள் மட்டுமே, ஒரே வீடு இதற்குள் ஒட்டுமொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் செல்வராகவன். ஒரே இடத்திலேயே மொத்தக் கதையும் நகர்வதால் காட்சியில் அலுப்புத் தட்ட வாய்ப்பிருக்கிறது. ஆனால், நடிப்பால் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா பாடல் காட்சி, புதுப்பணக்கார கெத்து, ரெஜினாவை தொந்தரவு செய்யும் காட்சிகள் என ஒவ்வொரு சீனுமே நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக, படத்தின் இடையிடையே எஸ்.ஜே.சூர்யாவின் உணர்வை கையில் கிட்டாருடன் ஸ்டேஜில் பாடுவதுபோல இடைச்சொருகலாக வரும் காட்சி புதுமை.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு கூடுதல் ப்ளஸ். ஒவ்வொரு பாட்டுமே உள்ளுக்குள் ஜாலி உணர்வை ஏற்படுத்துகிறது. பின்னணி இசையிலும் வழக்கம் போல பெஸ்ட் கொடுத்திருக்கிறார் யுவன். அதோடு, அரவிந்த் கிருஷ்ணாவின் கேமிரா படத்துக்கு வேறு லெவல் உணர்வைக் கொடுக்கிறது. சிவப்பு, பச்சை லைட்டிங் குறிப்பாக கூறலாம்.

ரெஜினாவைத் தேடி வரும் சிஸ்டர் கேரக்டர் அதன்பிறகு என்னவானது என தெரியவில்லை, கண்ணுத் தெரியாத தாத்தா ரோல் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதும் பாதியில் நிற்கிறது. ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் போலீஸ் கேஸ் ஏதும் நடக்காதா, அடுத்தடுத்து கொலை விழும் போது அதற்கான காட்சியில் தெளிவு இதெல்லாம் மிஸ்ஸிங்.

இறுதியாக, பேய் படத்திலேயே புது வெர்ஷனைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அதற்கு முழு காரணமாக எஸ்.ஜே.சூர்யா மட்டுமே இருக்கிறார். ரசிகர்களுக்கு நிச்சயம் புதுமையான ஒரு அனுபவமாக நெஞ்சம் மறப்பதில்லை இருக்கும். செல்வாவின் புது முயற்சியாக நிச்சயம் கொண்டாடலாம்.

**- தீரன் **

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *