இயக்குநர் நெல்சன், தனது படத்தில் தொடர்ந்து சிவகார்த்திகேயனை பாடலாசிரியராக பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.
‘கோலமாவு கோகிலா’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். பின்பு இவர் இயக்கிய ‘டாக்டர்’ படம் வெளியாகி வெற்றி அடைந்தது. அடுத்து விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படம் இந்த மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கடுத்து ரஜினிகாந்த்துடன் ‘தலைவர் 169’ல் இணைந்திருக்கிறார். நெல்சனுடைய முதல் படமான ‘கோலமாவு கோகிலா’வில் இருந்து அடுத்து இயக்க இருக்கும் ‘தலைவர் 169’ வரை இவரது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும், ‘கோலமாவு கோகிலா’வில் கல்யாண வயசு பாடல், ‘டாக்டர்’ரில் செல்லம்மா, ‘பீஸ்ட்’ படத்தில் ‘அரபிக்குத்து’ ஆகியவற்றை சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனை பாடலாசிரியராக பயன்படுத்துவது குறித்து நெல்சன் பேசும் போது, ‘எங்களுக்கு வசதியான ஒரு பாடலாசிரியர் என நினைக்கும் போது முதலில் நினைவுக்கு வருவது சிவகார்த்திகேயன் தான். ஒரு விஷயத்தை கொடுத்தால் சின்சியராக செய்து முடிப்பார். மேலும் ஒரு பாடல் எழுத உட்காருவதில் இருந்து அது ரெக்கார்டிங் போய் அவுட்புட் வரும் வரை சரியாக வந்து விட்டதா என கேட்பதும், அந்த பாடலை மெருகேற்ற முயற்சிப்பதும் என சிவா டேலண்ட் + சின்சியர். அதனால் பாடல்கள் சரியாக வந்து ஹிட் ஆகிவிடும். எங்களது கூட்டணி எப்போதுமே தொடரும்” என பேசியுள்ளார்.
**ஆதிரா**