நடிகர் நானி இந்திய சினிமா தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழி வாரியாக பிரிந்து கிடப்பதை பற்றி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் , “இந்திய சினிமா தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழி வாரியாக பிரித்து பார்ப்பது என்பது முட்டாள்தனமானது. என்ன நடந்தாலும் இறுதியாக வெற்றி பெறுவது சினிமா மட்டும் தான். பாலிவுட், மல்லுவுட், கோலிவுட் என நாம் தான் தனித்தனியாக பெயர் வைத்திருக்கிறோம். இவை எல்லாம் ஹாலிவுட்டில் இருந்து நாம் எடுத்தவை. மொழிகள் வேறாக இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் ஒரே தேசத்தை சேர்ந்தவர்கள்.
நாம் நல்ல படங்கள் அனைத்தையும் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமாவை பொறுத்தவரை ஒரு சூப்பர் ஸ்டார் உள்ளார்கள். அவர்களின் படங்கள் வரும்போது கொண்டாடுகிறோம். நல்ல படங்கள் உருவாக்குவது மட்டும் தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். மற்றபடி வடக்கு தெற்கு என்று போட்டி போடுவது ஆரோக்கியமானதல்ல.
அதைப்போல பான்- இந்தியா படங்கள் என்பதை சினிமாவை உருவாக்குபவர்கள் சொல்லக் கூடாது. அதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா மொழிகளிலும் ஒரு படம் வெளியாகிறது என்பதற்காக மட்டும் ஒரு படம் பான் இந்தியா படமாக உருவாக்கி விட முடியாது. பான் இந்தியா திரைப்படம் என்பதற்கான அனைத்து வரையறைகளுக்குள்ளும் ஒரு படம் அமைந்து அதில் இந்தியாவை கடந்தும் அந்த தாக்கத்தை உருவாக்க வேண்டும்.
அப்படி உருவான படங்கள் என்றால் ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட படங்களை சொல்வேன். இப்படியான படங்கள் உருவாகும் போது மக்கள் அதை மொழிகள் தாண்டியும் ரசிப்பார்கள்” என்று பேசியுள்ளார்.
**ஆதிரா**