கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த 2021 செப்டம்பர் 29 அன்று மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார். இதனால், கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புனீத் ராஜ்குமார் உயிருடன் இருந்தபோது அவர் ஏழை, எளிய மக்களுக்கு செய்த உதவிகள், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செய்த பணிகள் அனைத்தும் அவரது மரணத்துக்கு பின்னரே பொதுவெளியில் தெரிய தொடங்கியது. இதனால் அவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. இதனால், பெங்களூரில் உள்ள அவருடைய நினைவிடத்தைக் காண அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் நாள்தோறும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
புனீத் ராஜ்குமாரை கௌரவிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸை அவரது பிறந்த நாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். புனீத் ராஜ்குமார் திடீர் மரணமடைந்த அன்று வெளிமாநில திரை கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்த நேரில் செல்லமுடியவில்லை. அதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின் அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் விஜய் புனீத் ராஜ்குமார் நினைவிடத்திற்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
**இராமானுஜம்**