o38 நாட்களில் எடுத்த செல்ஃபி: தாணு பாராட்டு!

Published On:

| By admin

ிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் ஏப்ரல் 1 அன்று வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்திருந்தனர். மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று (26.04.2022) நடைபெற்றது.
இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப் படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன். தம்பிகள் கேட்டதும் சரி, தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம். ஜி.வி.பிரகாஷ் நமக்குக் கிடைத்த ஒரு நல்முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்துக்குப் போக வேண்டும்.
கவுதம் மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒப்புக்கிட்டார். அவர் இயக்குநர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒரு படம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப் படம் தியேட்டருக்குத்தான் வரணும்னு நினைச்சேன். இந்தப் படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு காட்சி போட்டுக் காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்தேன். இந்தப் படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது” என்றார்.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share