இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட சிக்கல் காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக புதிய படங்களில் அவரால் நடிக்க முடியவில்லை.
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின் தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை விலக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேல் மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார்.
இதுகுறித்து வடிவேலு அளித்துள்ள பேட்டியில்,
“எனக்கு நடிப்பதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது மகிழ்ச்சி. இது எனக்கு மறுபிறவி, அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்க இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியில் எனக்கு 20 வயது குறைந்து இருக்கிறது. நான் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது முதலில் சினிமா வாய்ப்பு கிடைத்த உணர்வைத் தருகிறது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சுபாஷ்கரண்(லைகா உரிமையாளர்) தமிழக மக்களின் சபாஷ்கரனாகிவிட்டார்
எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் எனது ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். ரசிகர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.
சுராஜ் இயக்கிய படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தின் பெயர் நாய்சேகர் அதனாலேயே வடிவேலு நடிக்கும்படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக வடிவேலு கூறி இருக்கிறார் தொடர்ந்து 2 படங்களில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன். பின்னர் படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தடை விலக்கப்பட்டு அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படும் முதல்படத்தின் பெயர் இவருக்கு கிடைக்குமா என்பதே சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதிய படமொன்று தயாராகியுள்ளது.
அந்தப்படத்தில், ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கியவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21 ஆவது படைப்பாகத் தயாராகியுள்ளது.
இந்தப்படத்தின் பெயர் நாய்சேகர். படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் விளம்பரங்களைத் தொடங்கும்போது படத்தின் பெயரை அறிவிக்கலாம் என்று படக்குழுவினர் இருக்கின்றனர்.இந்நிலையில்தான், என்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல் வடிவேலு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் பணிகளை தொடங்கும் முன்னரே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாய் சேகர் என்கிற பெயரை முறைப்படி பதிவு செய்து படத்தைத் தயாரித்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். அவர்களிடம் இப்பெயர் இருப்பதை அறிந்த வடிவேலு, இப்பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அநதப்படத்தின் கதைப்படி பெயர் முக்கியமானதாக இருக்கிறது என்பதை ஏஜிஎஸ் நிறுவனம் சொல்லிவிட்டதாம்.
எப்படியெனில்? படத்தில் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது என்கிறார்கள்.
அதன்பின்னும் என்னுடைய அடுத்த படத்தின் பெயர் நாய்சேகர் என்று வடிவேலு பேட்டி கொடுத்து அலப்பறையை கூட்டி வருவது வடிவேலு இன்னும் திருந்தவும் இல்லை மாறவும் இல்லை என்றே தெரிகிறது என்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்.
**-இராமானுஜம்**
�,