fநடிகர் சங்கத் தேர்தல்: இடைக்காலத் தடை!

Published On:

| By Balaji

ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று தங்களது பதவிக்காலத்தை முடித்து ஜனவரி 24ஆம் தேதி அடுத்த தேர்தலும் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பல நடிகர் சங்க உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், தேர்தல் முறையின்றி நடைபெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்வதாகவும், நடிகர் சங்க உறுப்பினர்களின் பட்டியலை சரிபார்த்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் நியமிக்கப்பட்டு, அதுவரையில் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கீதா கவனித்துக்கொள்வார் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி கல்யாண சுந்தரம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவில், பல லட்சங்கள் செலவு செய்து நடத்தப்பட்ட தேர்தலை செல்லாது என அறிவிப்பது முறையாகாது. இந்தத் தேர்தலில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தல் செல்லாது என அறிவித்த உத்தரவை நீக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அதேசமயம் தனி அதிகாரி தொடர்ந்து சங்க நிர்வாகத்தை கவனிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாதத்துக்கு ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் தமிழக அரசின் சார்பில் பதிலளிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share