தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. கவுண்டமணி, செந்தில் இருக்கும்போது வடிவேலு, விவேக் உச்சத்தைத் தொட்டார்கள். இருவருமே கதாநாயகன் கனவில் சில படங்களில் நடித்து அவை போணியாகாமல் திரும்பிவந்தபோது, சந்தானம், சூரி இருவரும் தவிர்க்க முடியாத காமெடியனாகி இருந்தார்கள்.
சந்தானம் நிரந்தரமாகக் கதாநாயகனாகிவிட, கிடைத்த இடைவெளியில் தனது வித்தியாசமான உருவத் தோற்றத்தால் யோகி பாபு காமெடியனாகிவிட்டார். குறுகிய நாட்களில் ரஜினிகாந்த், விஜய் படங்களில் நடித்ததால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக, இவர் இல்லாத படங்கள் குறைவு என்கிற வளர்ச்சியை எட்டியுள்ளார்.
வடிவேலு இல்லாத படங்கள் இல்லை என்கிற நிலை ஏற்பட்டபோது தயாரிப்பாளர்களுக்கு எதிராக அவர் செய்த எதிர்மறையான செயல்களை இப்போது யோகி பாபு செய்யத் தொடங்கியுள்ளார்.
யோகி பாபு என்பதே கோடம்பாக்கம் சினிமாவில் பிரதானமாக உள்ளது. முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு நேரம் தவறாத கடமை வீரராக கால்ஷீட் விஷயத்தைப் பின்பற்றும் யோகி பாபு மற்ற தயாரிப்பாளர்களுக்குக் கடுமையான மன உளைச்சல், பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் என்கின்றனர்
யோகி பாபு நடிக்கும் சில படங்களுக்கு மொத்தமாகச் சம்பளம் பேசும் அவர், பெரும்பாலான படங்களுக்கு நாள் கணக்கில் சம்பளம் பேசுகிறார். ஒரு கால்ஷீட்டுக்கு (எட்டுமணி நேரம்) ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதைக் கொடுத்து அவரை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன என்பதால், பழைய வடிவேலு பாணியில் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவது, படப்பிடிப்பில் இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்க மறுப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகிறாராம்.
ஒரு நாளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இருபது நாட்களுக்குள் முடித்துவிட்டால் ஒரு கோடி கொடுத்தால் போதும் என்று படக்குழுவினர் திட்டமிடுகிறார்கள்.
ஆனால், அப்படி முடிக்கவிடாமல் நாட்களை அதிகப்படுத்துகிற வேலைகளை செய்கிறார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில். காலை ஒன்பது மணிக்குப் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றால் அதிகாலையில் வேறு படத்தின் ஷூட்டிங்கில் நடித்து விட்டு மூன்று மணி நேரம் தாமதமாக வருகிறாராம். மாலையிலும் ஆறு மணி வரை இருப்பதில்லையாம். ஐந்து மணிக்கு முன்பாகவே நான் போக வேண்டும் என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறாராம். இதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகிறதாம். அது யோகிபாபுவுக்கு லாபம். படக்குழுவுக்கு நஷ்டம்.
இதுமட்டுமின்றி அறிமுக இயக்குநர்கள் படம் என்றால், ஒரு காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்று கேட்டால், இதுவே போதும் நான் படத்தில் இருப்பதே பலம்தான். மிகச்சரியாக நடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் சொல்கிறாராம். இதனால் யோகி பாபுவை வைத்துப் படமெடுப்பவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
**-இராமானுஜம்**
.