மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து ஜனவரி 24ஆம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ.
அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கண் பார்வையற்றவராக நடித்துள்ளார். சீரியல் கில்லரான சைக்கோ கொலைகாரனின் கதையைக் கூறிய இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் சைக்கோ கொலைகாரன் இத்தனை கொலைகளைச் செய்தும் ஒரு சிசிடிவி கேமராவில் கூட பதிவாகவில்லையா, ஏன் ஓர் இடத்தில் கூட சிசிடிவி இல்லை என்னும் கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இந்த விமர்சனத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். ஒரு சாதாரண வாட்ஸ் அப் பகிர்வு என்று குறிப்பிட்டு அவர் பகிர்ந்த பதிவில், “சைக்கோ படத்தில் ஏன் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கப்படுகிறது. அந்தப் படம் சிறையில் ராம்குமார் வயரைக் கடித்த காலம், கோட நாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்டது என்பதால் சிசிடிவி கேமிரா எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில்.
முதல்ல அவனுங்கள சிசிடிவி கேமராவைக் காட்டச் சொல்லுய்யா… அப்புறம் நாங்க காட்றோம். என்னமோ ஆறுமுகசாமி கமிஷன் மாதிரி நை நைன்னு கேள்வி கேட்டுகிட்டு” எனக் கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு மிஷ்கின் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வெறும் ஃபார்வேர்டு மெசேஜ் என்று உதயநிதி குறிப்பிட்டிருந்தாலும், இந்தப் பதிவை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்தவர் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.
உதயநிதி இதைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, “மதியம் நான் போட்ட இந்த ஸ்டேட்டஸ் இன்னும் எங்க போய் நிற்கும் என்று தெரியலையே” என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.�,”