>வனமெல்லாம் செண்பகப்பூ!

Published On:

| By Balaji

திரை இசை குறித்த தொடர் – ஆத்மார்த்தி

பாடல்களைப் பற்றி எழுதுவது எப்போதும் பிரியமான செயலாகவே தொடர்கிறது. ‘புலன் மயக்கம்’ என்ற பெயரில் ஏற்கெனவே இணையத்தில் 100 அத்தியாயங்கள் தொடர்ந்து எழுதிய பிறகும் பாடல்கள் தீர்வதே இல்லை என்பது மட்டும் புரிந்தது. ‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்பதற்கு, அடுத்த வீட்டு வாசகமாக எழுதியது போதவே போதாது என்னும் பேருண்மை பாடல்கள் எனும் பெருஞ்செல்வத்தைப் பொறுத்தமட்டிலும் நிஜம்.

இசை எனும் கலைக்கும் பிறவற்றுக்கும் இருக்கக்கூடிய அடிப்படை வித்தியாசம் ஒன்றுதான். இசை மற்ற எல்லாவற்றையும் விடச் சிறக்க செய்கிறது. இசையென்பதில் ஆழ்வதற்கு எந்தவிதமான அறிதலும் நிர்பந்தம் இல்லை. மாமேதைகளுக்கும் சாமானியர்களுக்குமான கலையாக இசையின் விரிதல் மிக அதிகம். இந்த ஒரு புள்ளியில் இசையை அதன் மேன்மையை அந்தக் கலை மீதான மகா ஆர்வமாகக்கொண்டு அதனுள் ஆழ்ந்து பலவற்றையும் கற்றுத் தேர்பவருக்கு என்னவாகவெல்லாம் இருக்குமோ, அதைவிடக் கொஞ்சமும் குறைவதே இல்லை, முற்றிலும் எதுவும் அறியாத பாமரரும் உள்வாங்கிக் கொள்ளும் இசை.

அதனால் இசை என்பது கடவுளுக்கு அடுத்த இருக்கை என்பதை இன்னொரு முறை அழுத்தமாகச் சொல்லியவாறே ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ தொடருக்குள் நுழையலாம். எத்தனை வனங்கள் என்பதை எண்ணிடவே காலம் போதாது என்றிருக்கையில் எத்தனை செண்பகப்பூக்கள் என்பதை யாரால் அறுதியிட்டுக் கூற முடியும்!

**பெற்று வந்த வரம்**

வரதராஜுலு குமார் எனும் வீ.குமார், ‘மெலடி மன்னர்’ என்று அழைக்கப்பட்டவர். கே.பாலசந்தரின் மனவிருப்பம் மிகுந்த இசையமைப்பாளர்களில் முதல்வர். அவருடன் நாடக காலத்திலிருந்தே உடனிருந்தவர்.

**தூண்டில் மீன் படத்தில் ‘என்னோடு என்னென்னவோ ரகசியம்’, சொந்தமடி நீ எனக்கு படத்தில் ‘பெண்ணல்ல நீ ஒரு பொம்மை… பொய்யல்ல நான் சொல்வதுண்மை’, வெள்ளி விழா படத்தில் ‘காதோடுதான் நான் பாடுவேன்’, நிறைகுடம் படத்தில் ‘கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்’, எதிர்நீச்சல் படத்தில் ‘தாமரைக் கன்னங்கள்’, சதுரங்கம் படத்தில் ‘மதனோற்சவம் ரதியோடுதான்’ ஆகியவை குமாரின் குறிப்பிடத்தகுந்த பாடல் உருவாக்கங்களில் சில.**

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகிய இருவரும் குமாரின் பெருவிருப்பத் தேர்வுகள். பி.பி.ஸ்ரீனிவாஸையும் வித்தியாசமான பாடல்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டவர் குமார். இவருடைய மனைவி ஸ்வர்ணா, பின்னணிப் பாடகி. தீர்க்கமான அதேநேரத்தில் ஆன மட்டும் மெலடி மெட்டுக்களுடன் தன் பாடல்களை உருவாக்கியவர் குமார்.

குமாரின் ஜால இசைக்கு இந்தப் பாடல்கள் நல்ல எடுத்துக்காட்டுகளாக விளங்கக்கூடும். ஆன்மாவின் சத்தியப்புள்ளி ஒன்றிலிருந்து அரிதான மெட்டொன்று அகப்பட்டால் நல்ல இசைஞனால் அத்தனை சீக்கிரமாக அதனின்றும் வெளியேறி வந்துவிட முடியாது. குமாரின் இசை மேதமைக்குக் கட்டியம் கூறும் வண்ணம் இந்த மெட்டை முன்வைக்க முடிகிறது. இந்த மெட்டைத் தன் ஆன்மாவிலிருந்து அவர் உருவாக்கினார் என்பதை நம்புவதற்குச் சாட்சியமாகவே இதைக்கொண்டு, ஒன்று இரண்டல்ல… மொத்தம் மூன்று வெவ்வேறு பாடல்களை உருவாக்கினார் குமார். அவற்றுக்கிடையே காணக் கிடைக்கிற சின்னஞ்சிறிய வித்தியாசங்கள் இசையெனும் தேவ கலையில் மாத்திரமே உருவாக வல்லவை.

முதல் பாடல் கண்ணாமூச்சி படத்தில் இடம்பெற்றிருக்கும் [‘பொன்னை நான் பார்த்ததில்லை’](https://www.youtube.com/watch?v=iOB8HH2vvLo&feature=youtu.be). இதைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

அடுத்த பாடல் மங்கள நாயகி எனும் படத்தில் இடம்பெற்ற [‘கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை’](https://youtu.be/bKyTLqPR7VM). யேசுதாஸ், சுசீலா பாடியது. இவ்விரண்டையும் கடந்து வந்தால்தான் நம்மால் மூன்றாவது முத்தான பாடலுக்குள் நுழைய முடியும்.

டெம்போ அட்ஜஸ்ட்மென்ட்ஸ் எனப்படுகிற தாளக்கோவை வேகமாற்று மூலமாக மூன்று பாடல்களையும் அநாயாசமாகப் படைத்திருப்பது குமாரின் இசை மீதான பற்றுதலுக்கும் பாடல்களைப் படைப்பதில் அவருக்கிருந்த காதலையும் பறைசாற்றுகிறது.

**1975ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான தேன் சிந்துதே வானம் படத்தில் இடம்பெற்ற [‘உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்’](https://youtu.be/pl6AQ0C6mOE) என்னும் தமிழ்ப் பாடல், சரிதத்தில் அழிக்கமுடியாத சொல்வெட்டுகளாகத் தன்னை நிரந்தரம் செய்துகொண்டது.**

**மென் குரல் பறவை**

குமார் மெல்லிசை சக்கரவர்த்தி. கே.ஜே.யேசுதாஸ் தன் குரலால் மெலடி வனத்தின் அத்தனை மரங்களிலும் அமர்ந்தெழுந்த மென்குரல் பறவை. இந்த இருவரின் இணையில் உருவான இந்தப் பாடலின் சிறப்புகள்தான் என்னென்ன!

நின்றொலிக்கும் சுழல் பாடல்கள் கேட்பவரை வசப்படுத்துவதில்லை. மாறாக வசியம் செய்கின்றன. இந்தப் பாடலின் பல்லவியும் சரண வரிசைகளும் அவை வாக்கிய அமைப்பில் ஒரே சீராய்ச் சென்று முடிவடைந்துவிடுவதும் அப்படி முடிந்த வாக்கியங்களைப் பலவித வித்தியாசப் பூக்கள் கொண்டு கோத்தெடுக்கப்பட்ட கதம்ப மாலை போலவே இந்தப் பாடலின் உள் அமைப்பு இருப்பதும்தான் இதற்கொரு சுழல் தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன.

**‘வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்’ – இந்த வரியை யேசுதாஸ் தனக்கே உண்டான முத்தொன்றைப்போலே நிறைத்திருப்பார்.** உறுதியாகக் கையாள்வது உரை நிகழ்த்தும்போது எல்லா வார்த்தைகளுக்கும் சாத்தியம். அதுவே பாடலென்னும்போது குழைதலும் சிதைவும் பாடலின் உட்கட்டுமானங்களாகவே நிகழ்பவை. அப்படி இருக்கும்போது யேசுதாஸ் பாடுகிறாற்போல் எல்லாம் சங்கீதம் என்று இன்னோர் இடத்தில் வந்திருக்குமா என்றால் வரவே வராது என உறுதியாகக் கூறலாம். அப்படி ஒரு கனம் கொண்டு எடுத்தாண்டிருப்பார்.

‘வண்ண விழிப் பார்வை எல்லாம் தெய்வீகம்’ – இந்த வரியின் தெய்வீகம் என்பதும் அப்படித்தான் இருக்குமென்றாலும் சங்கீதம், தெய்வீகம் இவற்றை மாத்திரம் தனியே கவனித்தால் அதிலொரு கூடுதல் குறைதல் இருப்பதைக் கண்ணுறலாம்

*வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்*

*வண்ண விழிப் பார்வை எல்லாம் தெய்வீகம்*

*பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்*

*இன்பங்கள் உருவாகக் காண்போம்*

*பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்*

*இன்பங்கள் உருவாகக் காண்போம்*

சரணத்தின் எல்லா வரிகளுமே இரட்டித்துத் தொடர்கிறாற்போல் இதை அமைத்ததில்தான் இந்தப் பாடலின் ஜாலமே இருக்கிறது எனச் சொல்வேன்.

**குரலோசை குயிலோசை என்று இந்த வரியைப் பாடும்போது தன் குரலை எத்தனை அடியாழத்தில் ஆழ்த்த முடியுமோ அதைச் செய்திருப்பார் யேசுதாஸ்.** இதற்கடுத்த வரி, கிட்டத்தட்ட மன நிசப்தமென்றே ஒலிக்கும்.

*மொழி பேசு அழகே நீ இன்று*

*உன்னிடம் மயங்குகிறேன்*

*உள்ளத்தால் நெருங்குகிறேன்*

*எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே*

*உன்னிடம் மயங்குகிறேன்*

*உள்ளத்தால் நெருங்குகிறேன்…*

*தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்*

*நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்…*

*ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…*

*தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்*

*நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்…*

*கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்*

இந்தப் பாடலின் அற்புதமாகவே இந்த வரிகளிரண்டும் விரியும். ஆன்மாவிலிருந்து பாடினால் மட்டுமே இப்படிப் பாட இயலும். அது யேசுதாஸ் என்ற மேதை பெற்று வந்த வரம்.

*கண்ணே உன் கை சேரத் தணியும்*

*கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்*

*கண்ணே உன் கை சேரத் தணியும்*

*இரவென்ன பகலென்ன தழுவு*

*இதழோரம் புது ராகம் எழுது*

முடிவை நெருங்கும் இந்த இடத்தில் ஓர் இசைவருடல் வரும். குமாரின் கையெழுத்தென்றே அதைக் கொள்ளலாம். ஓங்கி அடிப்பதல்ல; உறுதியாய்ப் பிளப்பதே மெலடி என்பதன் இலக்கணம் என நிறுவும் வகையில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

*உன்னிடம் மயங்குகிறேன்*

*உள்ளத்தால் நெருங்குகிறேன்*

*எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே*

*உன்னிடம் மயங்குகிறேன்*

*உள்ளத்தால் நெருங்குகிறேன்…*

வாலியின் மொழி வன்மையை எடுத்துச் சொல்வதற்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. இந்தப் பாடல் தன் விளக்கமாகத் தொடங்குகிறது. மயங்குகிறேன், நெருங்குகிறேன், காதலியே, தேவதையே… என எளிய தொடர் சித்திரமாகத் தொடங்குகின்ற போதிலும் பல்லவியின்போது ஓடுதளத்தில் விரையும் விமானத்தை நினைவுறுத்தும் சொல்லாடல் சரணத்தில் தன்னைப் பறவையென்றாக்கி வானேகுவது சிறப்பு.

‘இன்பங்கள் உருவாகக் காண்போம்’ என்பது தொடங்கி முழுப்பாடலுமே ஒரே சீரான வேகத்தில் படர்வது அழகு. யேசுதாஸ், வீ.குமார், வாலி மூவருக்கும் இப்பாடல் என்றென்றும் புகழ் விளக்காய் ஒளிரும் என்பதில் ஐயமில்லை.

**வாழ்க இசை.**

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

*வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.*

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share