^கொரோனாவால் தள்ளிப் போகும் படங்கள்!

Published On:

| By Balaji

கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, திரையரங்குகளில் 50% மட்டுமே இருக்கை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, இரவு ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்குகளும் அமல் படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்கம் செயல்படுவதே மிகப்பெரிய சவாலாகியிருக்கிறது.

இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைய வழியில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகளையும் எடுத்துள்ளனர். அதன்படி, திரையரங்குகளை தொடர்ச்சியாக இயக்க இருக்கிறார்கள். அதோடு, காலை, மதியம், மாலை என மூன்று காட்சிகளை திரையிடவும், ஞாயிறு விடுமுறை விடவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் கொரோனாவினாலும், திரையரங்க கட்டுப்பாடுகளினாலும் சில படங்கள் தள்ளிப் போக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வார வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருந்த சசிகுமார் நடித்திருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படம் தள்ளிப் போகிறது. சசிகுமாருக்கு நாயகியாக மிருணாளினி நடித்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரஜினி முருகன் பட இயக்குநர் பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 30ஆம் தேதிக்கு 2 படங்கள் டார்கெட் செய்யப்பட்டிருந்தது. விஜய்சேதுபதி நடிப்பில் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் லாபம், ரியோ நடிப்பில் ப்ளான் பண்ணிப் பண்ணனும் படங்களும் தள்ளிப் போவதாகச் சொல்கிறார்கள்.

அதோடு, ரம்ஜான் பண்டிகை சிறப்பாக வெளியாக இருந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் படமும் தள்ளிப் போகிறது. ஏற்கெனவே மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல் காரணமாக தள்ளிப் போனதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மீண்டும் தள்ளிப் போவதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, டாக்டருடன் மோத இருந்த மற்றுமொரு படம் கோடியில் ஒருவன். இந்தப் படமும் தள்ளிப் போவதாகச் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு திரையரங்கில் தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான் படங்களும் பழைய ஹிட் திரைப்படங்களை திரையிடவும் இருக்கிறார்கள்.

**- ஆதினி**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel