படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

entertainment

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் சாதனையைக் கூறி படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில், படத்தின் வசூல் படத்தின் வெற்றி கிடையாது எனக் கூறியுள்ளார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
வீட்ல விசேஷம் திரைப்படம் கடந்த ஜூன் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி படக் குழுவினருடன் பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “தற்போது உலகம் முழுவதும் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூலைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறி கொண்டிருக்கின்றனர். படத்தின் வசூல், படத்தின் வெற்றி கிடையாது என்பதை நான் நம்புகிறேன். இருந்தாலும் எங்களது முந்தைய படங்களைவிட இந்தப் படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இந்தப் படம் மக்களுடைய வார்த்தைகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் லாபகரமான படங்களில் ஒரு படமாக இந்தப் படம் கண்டிப்பாக இருக்கும் என நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்.
கொரோனாவுக்குப் பிறகு, மக்கள் பெரிய நடிகர்கள் நடித்த படத்துக்கு மட்டுமே திரையரங்குக்கு வருவார்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால், இந்தக் கதையின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். இந்தப் படத்தை அதற்குண்டான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்து வேலை பார்த்தோம்.
இந்தப் படத்துக்குக் கிடைத்த விமர்சனங்கள் எங்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. எங்களுக்கு ஆதரவு அளித்த பத்திரிகையாளர்களுக்கு எங்களது படக்குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

**-இராமானுஜம்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *