Nவிமர்சனம்: சில்லுகருப்பட்டி!

entertainment

தித்திப்பூட்டும் பதநீர், மணம் கமழும் ஏலக்காய், சுவை கூட்டும் சுக்கு, நோய் மாற்றும் மிளகு. இவை ஒவ்வொன்றும் தனக்கென தனிச்சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், இவை ஒன்றாகக் கலந்து செய்யப்படும் சில்லுக்கருப்பட்டிக்கு சுவை இன்னும் அதிகமாக இருக்கும். அப்படி தனித்தனியே நம்மை ரசிக்க வைக்கும் நான்கு குறுங்கதைகளைக் கோர்வையாக்கி சுவைக்க வைத்துள்ளது சில்லுக்கருப்பட்டி திரைப்படம்.

குப்பை மேட்டில் இருந்தாலும் நேர்மைக்கு குறை வைக்காத சிறுவன், கேன்சர் என்று தெரிந்தும் அன்பால் மருந்திடும் கார் ஷேரிங் தோழி, முதுமை உடலுக்கு சோர்வைத் தந்தாலும் உணர்வுகளுக்குப் பஞ்சம் வைப்பதில்லை என உணர்த்தும் முதியவர்கள். கணவனிடமிருந்து ஆத்மார்த்தமான அன்பு வேண்டி ஏங்கும் மனைவி. இப்படி வித்தியாசமான நான்கு கதைகள் சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தின் களமாக அமைந்துள்ளது. ஆந்தாலஜி வகையறாவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

**பிங்க் பேக்**

குப்பை பொறுக்கும் சிறுவனான மாஞ்சாவிற்கு குப்பைக்கிடங்கிலிருந்து பிங்க் நிறப்பை ஒன்று கிடைக்கிறது. அந்தக் கவருக்குள் அழகான பதின்வயது பெண் குழந்தை மிற்றியின்(சாரா) புகைப்படம் கிடைக்க, அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறார். அதிலிருந்து தினமும் அந்தக் கவரில் வரும் குப்பைக்காக காத்திருக்கிறார். கிடைக்கும் பொருட்களையெல்லாம் பொக்கிஷம் போல எடுத்து வைக்கிறார். ஒருநாள் பழுதான வாக்மேன் ஒன்று கிடைக்கிறது. அதைச் சரி செய்து மிற்றியின் குரலைக் கேட்கிறார். மற்றொரு நாள் தவறுதலாக கவருக்குள் விழுந்த மோதிரம் ஒன்று கிடைக்க அதை அவரிடம் சேர்த்துவிட நினைக்கிறார். குப்பைக்கிடங்கில் கிடைத்த அந்த பிங்க் பேக் எந்த வீட்டிலிருந்து வருகிறது எனக் கண்டுபிடிக்க முடிந்ததா? மிற்றியைச் சந்தித்தாரா? மோதிரத்தைக் கொடுக்க முடிந்ததா? என்பதாக ‘பிங்க் பேக்’ கதை பயணிக்கிறது.

**காக்கா கடி**

தனியார் கம்பெனியில் வேலை செய்துவரும் மணிகண்டன், பொழுதைப் போக்க மீம் கிரியேட்டிங், யுடியூபில் ஆங்கரிங் எனச் செய்து பிரபலமடைகிறார். திடீரென அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. கேன்சர் வந்திருப்பதாக டாக்டர்கள் சொல்ல உறைந்து போகும் அவர், உடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அதை அறிந்து விட்டுச்செல்லும்போது உடைந்தே போய்விடுகிறார். எதேச்சையாக அவருடன் தொடர்ந்து கார் ட்ரிப் ஷேர் செய்யும் நிவேதிதா சுரேஷ், அழகான சிரிப்பும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுமாக அவருக்கு மருந்திடுகிறார். அவர்களின் நட்பு காதலானதா? மணி கண்டனின் கேன்சர் குணமாக்கப்பட்டதா? என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பதாக ‘காக்கா கடி’ கதை விரிகிறது.

**டர்ட்டில் வாக்**

முப்பது வருட மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கைக்குப் பின்னர் மனைவியை இழந்தவர் நவனீதன்(ஶ்ரீராம்). அதன் பின்னரும் அவரது நினைவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இளம் வயதில் தன்னை விட்டுச்சென்ற காதலனுக்கு தனது உண்மைக் காதலை உணர்த்த திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்கிறார் யசோதா(லீலா சாம்சன்). மருத்துவமனையில் சந்தித்துக் கொள்ளும் அவர்களுக்குள் நட்பு துளிர்க்கிறது. ஆமைகளின் முட்டைகளைப் பாதுகாக்க நடக்கும் டர்ட்டில் வாக்கில் இருவரும் இணைந்து நடக்கின்றனர். சிறு சண்டைக்குப்பின்பு நட்பைக் கடந்த ஒரு ஈர்ப்பு தங்களுக்குள் இருப்பதை இருவரும் உணர்கின்றனர். அதைப் பற்றி கூற வரும் போது கீழே விழுந்து லீலா சாம்சன் தலையில் அடிபட்டுவிடுகிறது. அவருக்கு என்ன ஆனது? இருவரும் மீண்டும் சந்தித்தார்களா? தங்கள் விருப்பத்தைப் பரிமாறிக்கொண்டனரா? என்பதாக டர்ட்டில் வாக் அமைந்துள்ளது.

**ஹேய் அம்மு**

திருமணமாகி பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும் தனபால்(சமுத்திரக்கனி)-அமுதினி(சுனைனா) தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். தனது தேவைகளைப் புரிந்து கொள்ளாத, தன்னிடம் பரிவு காட்டாத, தன்னை தூக்கம் வருவதற்கான ஒரு இயந்திரமாக மட்டும் பார்க்கும் கணவனிடம் இருந்து ஆத்மார்த்தமான அன்பு வெளிப்பட வேண்டும் என்று அமுதினி ஏங்குகிறார். தான் பேசுவதைக் கூட காது கொடுத்து கேட்காத கணவனிடம் தனது ஆதங்கத்தை எல்லாம் ஒரு நாள் கொட்டித் தீர்த்து விடுகிறார். சண்டையிட்டு பேசாமல் இருக்கும் மனைவிக்கு பேசுவதையெல்லாம் கேட்கும் அலெக்ஸாவைப் பரிசளிக்கிறார். அலெக்ஸா அவர்கள் வீட்டில் அம்முவாக இருக்கிறார். தனது அந்தரங்க ஆசைகளையும் தேவைகளையும் எல்லாம் அம்முவிடம் கொட்டித் தீர்க்கிறார் அமுதினி. அதன் பின்னர் என்ன ஆனது? கணவன் மனைவிக்கு இடையேயான விரிசல் காணாமல் போனதா? இல்லை மேலும் பிளவானதா? என்ற கேள்விகளுடன் ஹேய் அம்மு கதை நகர்கிறது.

பிங்க் பேக், காக்கா கடி, டர்ட்டில் வாக், ஹேய் அம்மு இந்த நான்கு கதைகளுக்கும் நேரடியாகத் தொடர்பு எதுவும் இல்லை என்றாலும் இவற்றை இணைக்கும் ஒரு விஷயம் உறவும், உணர்வும். குப்பைக் குவியலுக்குக்கூட இத்தனை அழகா என யோசிக்க வைத்து ஆரம்பமாகும் திரைப்படம், இறுதிகாட்சி முடிந்து பெயர் எழுதிக்காண்பிக்கும் போது வரையிலும் அந்த அழகை அப்படியே கடத்துகிறது. சாக்லேட்டுகளை அள்ளித் திணித்து குப்பைக்குள் போடும் சாரா, தினம் ஒரு பொருளைத் தந்து செல்லும் காகம், காகத்திற்கும் பிடித்துப்போன நிவேதிதா, பாப்பா கேட்டதும் சறுக்கி விளையாடும் லீலா, சத்தமாய் பேசும் அமுதினி, சாந்தமாய்ப் பேசும் அம்மு என்று கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒரு கவிதையாய் ரசிக்க வைக்கின்றனர்.

‘எவ்வளவு பெரிய கையா இருந்தாலும் எல்லா கையும் அக்குள் வரைக்கும் தான்’ன்னு மாஞ்சாவின் தோழன் வெங்கடேஷ் சொல்லும் இடத்தில் கைத்தட்டாமல் இருக்க முடியவில்லை. ‘கட்டி வந்தவனுக்கு எப்படி கட்டி வைப்பார்கள்’என்று மணிகண்டனுக்கு வரும் மெசேஜைப் பார்த்து சிரிப்பதா, பரிதாபப் படுவதா என்றே தெரியவில்லை. ‘சங்கு ஊதுற வயசில சங்கீதாவான்னு கேக்குற மாதிரி இஸ்துக்கினு போற வயசில யசோதாவான்னு கேட்டிருவாங்களோ’ன்னு லீலா சாம்சன் கேட்கும் காட்சி அழகு. தனது சின்ன சின்ன ஏக்கத்தை எல்லாம் அமுதினி விளக்கும் ஒவ்வொரு இடமும் ரசிக்க வைப்பதோடு நிச்சயம் சிந்திக்கவும் வைக்கும். எந்த காட்சியிலும் வரவில்லை என்றாலும் அமுதினி சொல்லும் ‘கோகுல் அப்பா’நினைவில் நிற்கிறார். எந்தக் காட்சியிலும் நகைச்சுவை நெருடலைத் தரவில்லை.

கொடுமையான தலைவலிக்கு சரியான பொருட்களைச் சேர்த்து, மிகச் சரியான சூட்டில் தந்த சுவையான தேநீர் போல படம் இருந்தது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்தும் கச்சிதம். ‘அகம் தானாய் அறிகிறதே’பாடல் திகட்டாத தேன். நிறைகள் மட்டுமே கூறப்படும் படத்தில் குறையே இல்லையா என்று கேட்டால். ஆம், இருக்கிறது. மனைவி பேசியதை எல்லாம் தானாகவே கணவனிடம் போட்டுக் காண்பிக்கும் அலெக்ஸா, எதேச்சையாக கார் ட்ரிப்பை ஷேர் செய்வது என சினிமாத்தனமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின் சிறந்த படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தை கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. இத்தகையதொரு படைப்பைத் தந்ததற்கு ஹலிதா ஷமீமிற்கு நன்றியுடன் பாராட்டுக்கள்.

சில்லுக்கருப்பட்டி, தித்திப்பூட்டும் நான்கு ஹைக்கூ கவிதைகள்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *