ஒவ்வொரு வாரமும் வழக்கம் போல திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, இந்த மார்ச் & ஏப்ரல் மாதத்தை இலக்காகக்கொண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கின்றன. மார்ச் முதல் வார ரிலீஸாக தமிழில் நான்கு படங்கள் வெளியாகின்றன. அதில் இரண்டு படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
**நெஞ்சம் மறப்பதில்லை**
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம், நான்கு வருடங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. பொருளாதாரச் சிக்கலினால் படம் வெளியாக முடியாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், பல்வேறு போராட்டங்களைத் தாண்டி இன்று வெளியாகியுள்ளது. செல்வராகவன் படமென்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்தப் படத்துக்கும் அப்படியான எதிர்பார்ப்புதான்.
ரன்னிங் டைம் : 2 மணி நேரம் 30 நிமிடம்.
**அன்பிற்கினியாள்**
மலையாள சினிமாவில் வெளியான மிக முக்கிய சினிமா ‘ஹெலன்’. இந்தப் படத்தில் கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நடித்த அன்னா பென் நடித்திருந்தார். நாயகி முக்கியத்துவம் கொண்ட படமாக வெளியாகிப் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான், ‘அன்பிற்கினியாள்’. அன்னா பென் நடித்த கேரக்டரில் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், கீர்த்தி பாண்டியனின் ரியல் தந்தையான நடிகர் அருண் பாண்டியன்தான், படத்திலும் இவருக்கு தந்தையாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் தந்தை ரோலில் லால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரன்னிங் டைம் : 2.05 மணி நேரம்.
**மிருகா**
ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் பி.வினோத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிருகா’. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதோடு, ராய்லட்சுமி மற்றும் தேவ் கில் முக்கிய லீடில் நடித்துள்ளனர். வழக்கமான கமர்ஷியல் சைக்கோ த்ரில்லர் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரன்னிங் டைம் : 2.10 மணி நேரம்.
**டோலா**
ஆதிச்சந்திரன் இயக்கத்தில் சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் டோலா. புதுமுகங்கள், புதுமுக இயக்குநர்கள் என படம் உருவாகியிருக்கிறது. அட்டு படத்தில் நடித்த ரிஷி ரித்விக் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆறுதலான ஒரே விஷயம் படத்தின் ரன்னிங் டைம் 1.41 நிமிடங்கள் மட்டுமே.
**- தீரன்**�,