தமிழ் சினிமாவில் அடியாளாகவும், வில்லனாகவும் வலம் வந்து தற்போது கதாநாயகனாக வளர்ந்திருப்பவர் ராஜேந்திரன் என்னும் மொட்டை ராஜேந்திரன்.
லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் பழனியப்பன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ராபின் ஹுட். ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்தத் திரைப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் கூறும் போது, “மச்சம்பட்டி என்ற கிராமத்தில் நாற்பது வருடங்களுக்கு முன்பு மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். அந்த ஊர் மக்களின் ஒரே ஆறுதல் சுதந்திரப் போராட்டத் தியாகி ராமசாமி. அதே ஊரில் சிறு சிறு திருட்டு வேலைகளில் மொட்டை ராஜேந்திரன் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். காவலர்களால் கூட அவரை எதுவும் செய்ய முடியவில்லை. திடீரென தியாகி ராமசாமி இறந்துவிட மக்களுக்கு கிடைக்க இருந்த அரசின் பணத்தை ஊர் தலையாரி திட்டமிட்டு திருட நினைக்கிறார். இது மொட்டை ராஜேந்திரனுக்குத் தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்திற்காக மழை இல்லாமல் வறண்ட கிராமம் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள வல்லப்பன்பட்டி என்ற கிராமம் பல ஆண்டுகளாக மழையே வராமல் வறண்டுபோய் கிடந்தது என அறிந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத ஒரு அதிசயம் நடந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதனால் ஊர்மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தோம்” என்றார்.
இந்தப்படத்தில் அம்மு அபிராமி, மனோகரன் உள்ளிட்டவர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,