மூக்குத்தி அம்மன்: இண்டர்நெட்-டிவியில் இறங்குகிறாள்!

Published On:

| By Balaji

தங்களது எதிர்காலக் கனவுகளை சினிமா தியேட்டர்களின் பூட்டுடன் சேர்த்து பூட்டிவிட்டு, எப்போது திறப்பது என்ற ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் தியேட்டர் ஓனர்கள். கடன் வாங்கிய பணத்தில் எடுத்த படங்களை எப்படியாவது விரைவில் ரிலீஸ் செய்து ஏற்படும் நஷ்டத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம் எனக் காத்திருக்கின்றனர் தயாரிப்பாளர்கள். இவர்களில் முன்னவருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், பின்னவருக்கு ஆபத்தில் உதவும் வகையிலும் இருப்பவை OTT தளங்கள். தியேட்டரைத் திறப்பதற்குள் நமது தரப்பு லாபத்தை எடுத்துவிடலாம் என பல திரைப்படங்களும், OTT தளங்களை நோக்கித் திரும்ப, யாரும் எதிர்பார்க்காத வகையில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் OTT தளத்திற்கு பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் சினிமா துறையை சுற்றி வருகிறது.

தியேட்டர்களில் வருடத்துக்கு மூன்று படங்களுக்குக் குறையாமல் ரிலீஸ் செய்யும் வேல்ஸ் நிறுவனம் தயாரித்த படம் OTT ரிலீஸுக்கு எப்படி சென்றது என ஏற்கனவே இந்தப் படத்தின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சொல்லும் செய்தி வேறு விதமாக இருக்கிறது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் சில முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகும் ‘பாவக் கதைகள்’ திரைப்படத்தினை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அப்படி விக்னேஷுடன் ஏற்பட்ட பழக்கத்தில், நயன்தாராவிடம் ஒரு படத்துக்கு பேசி முடிக்க வந்தபோது, மூக்குத்தி அம்மன் படத்தின் OTT விலையும் பேசி முடிக்கப்பட்டது என்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் மாதிரியான பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தை, அதில் நடித்த ஒரே காரணத்துக்காக நயன்தாராவினால் இப்படி விற்றுவிட முடியுமா என்று கேட்டபோது, “நயன்தாரா, அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கணிசமான தொகையினை முதலீடாக போட்டுவிடுவார். படம் ரிலீஸாகி வரும் வசூலில் அந்தப் பணத்தின் அசல், வட்டி, லாபத்தில் பங்கு என அவருக்குக் கொடுக்கப்படும். அவரை படத்தில் கமிட் செய்வதற்கான நிபந்தனைகளில் இதுவும் ஒன்று. மே மாதம் ரிலீஸாகவேண்டிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஏற்கனவே நான்கு மாதங்களைக் கடந்து சென்றுவிட்டது. அந்த நான்கு மாதங்களுக்கும் சேர்த்து தனது பணத்துக்கான வட்டியைத் தருகிறீர்களா என்று கேட்டால் தயாரிப்பு தரப்பு என்ன செய்வார்கள்? எனவே தான் OTT-க்கு படத்தைக் கொடுத்துவிட்டார்கள்” என்கின்றனர் சினிமா வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்.

இதற்கு வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று விசாரித்தபோது, ‘படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜி நயன்தாராவிடம் எவ்விதத்திலும் பேசி சமாதானம் செய்யவைக்க இயலாதவர் என்பது வேல்ஸுக்குத் தெரியும். எனவே, OTT-யில் படம் கொடுக்கப்பட்டதற்கு போட்டியாக வருகிற தீபாவளி சிறப்பு திரைப்படமாக முன்னணி பொழுதுபோக்கு சேனல் ஒன்றிற்கு இந்தப் படத்தைக் கொடுத்துவிடுவது என வேல்ஸ் தரப்பில் முடிவெடுக்கப்பட்டு வியாபாரம் பேசப்பட்டிருக்கிறது. மக்கள் தியேட்டரில் பார்க்காத மூக்குத்தி அம்மன் படத்தை நேரடியாக டிவி-யில் ரிலீஸ் செய்தால் தீபாவளி நம்முடையது தான் என அந்த சேனலில் திட்டமிடப்பட்டு, இந்தப் படத்திற்கு இடையே உங்கள் விளம்பரம் இடம்பெறும் எனச் சொல்லி விளம்பரங்கள் வாங்கும் வியாபாரமும் தொடங்கிவிட்டது” என்கின்றனர் அந்தப் படத்தின் வியாபாரத்தை கவனித்துவந்தவர்கள்.

**-மதன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share