qமுன்பதிவில் வசூலை குவித்த மோகன்லால் படம்!

Published On:

| By Balaji

மோகன்லால் – பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ளது மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம். இந்தபடம் இன்று உலகமெங்கும் வெளியானது.

சுமார் 85 கோடி ரூபாய் செலவில் இந்தப்படம் உருவாகியுள்ளது. ஆனால் ஓடிடியில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேட்டும் கூட கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தப்படத்தை கொடுக்காமல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு காத்திருந்தார் அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.

ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட இந்தப்படத்தை தற்போதைய சூழலில் தியேட்டர்களில் வெளியிட்டால் படத்திற்காக போட்ட முதலீட்டை அப்படியே திரும்ப எடுக்க முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டதால், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரானார்.

இந்த சமயத்தில் கேரள அரசு தலையிட்டு தியேட்டர் வெளியீட்டில் சில விஷயங்களில் உதவி செய்ய முன் வந்தது. அதை தொடர்ந்து, மரைக்கார் படத்தை தியேட்டர்களில் வெளியிட முடிவு எடுத்தார். அந்த வகையில் கேரளாவில் 625 தியேட்டர்கள் உட்பட உலகெங்கிலும் சேர்த்து 4100 திரையரங்குகளில் 16000 காட்சிகள் தினமும் திரையிடப்பட இருக்கின்றன.

இந்தநிலையில் படத்திற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கப்பட்டது. தற்போதுவரை முன்பதிவிலேயே நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிற தகவல் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே வெளியாகியுள்ளது. அந்தவிதமாக இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி முன்பதிவிலேயே அதிகம் வசூலித்த முதல் படம் இதுதான் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்துள்ளது.

இந்நிலையில் மலையாளத் திரையுலகின் மூத்த நடிகர் மம்முட்டி, மோகன்லால் இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உலகம் முழுவதும் வெளியாகும் ‘மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்மம்’ படத்திற்காக மோகன்லால், பிரியதர்ஷன் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்த மோகன்லால், “அன்புள்ள இச்சக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share