பாரிஸ் ஹில்டன் இந்தாண்டில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், பாப் ஸ்டார் ரிஹானா தனது துணை அதிபராக இருக்க தான் விரும்புவதாகவும் கூறுகிறார்.
உங்கள் வாழ்நாளில் நீங்கள் கேட்பீர்கள் என்று நீங்கள் ஒருபோதும் நினைக்க முடியாத செய்திகளை தொடர்ந்து கொடுக்கும் ஆண்டாக 2020ஆம் ஆண்டு தொடர்கிறது.
முன்னாள் ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமும் பேஷன் மாடலுமான பாரிஸ் ஹில்டன், தான் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாகக் கூறி உலகின் கவனத்தை தன் மீது திருப்பியுள்ளார். இந்த வார தொடக்கத்தில் பாரிஸ் ஹில்டன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஓவல் அலுவலகத்திலும், பிங்க் நிறத்தில் தோற்றமளிக்கும் வெள்ளை மாளிகையின் முன்பும் தனது புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறார் பாரிஸ். மேலும், டொனால்ட் டிரம்பிடமிருந்து அவர் தனது பிரச்சார முழக்கத்தை லேசான மாற்றங்களுடன் அறிவித்திருக்கிறார். Make America Great Again என்ற டிரம்பின் பிரச்சாரத்தை ஹில்டன், ‘Make America Hot Again’ என மாற்றி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்ட 39 வயதான பாரிஸ் ஹில்டன், பாரிஸ் ஃபார் பிரசிடென்ட்” என்ற தலைப்பில் பேட்டி அளித்தார். அதில் பிரபல பாப் பாடகி ரிஹானாவை துணை அதிபராக தேர்வு செய்வதாகக் கூறினார். “ரிஹானா, அவர் அழகாகவும் திறமையாகவும் இருக்கிறார், அவர் ஒரு சிறந்த துணை அதிபராக உருவாகுவார் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹில்டன் வீடியோவில் கூறுகிறார். மேலும், வெள்ளை மாளிகைக்கு இளஞ்சிவப்பு வண்ணம் தீட்டுவதாகவும் அவர் உறுதியளித்தார். ஏனெனில் “வெள்ளை மிகவும் சலிப்பாக இருக்கிறது” எனக் காரணம் கூறினார்.
ராப் பாடகர் கெய்ன் வெஸ்ட் தான் ஜோ பிடென் மற்றும் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில நாட்களில் பாரிஸ் ஹில்டனின் 2020 அதிபர் தேர்தல் பிரச்சார செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு நாடுகள் கொள்கைகளை தான் நம்பவில்லை எனக் கூறும் கெய்ன் வெஸ்ட், “மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்” என்று தன்னைத் தானே கூறிக்கொண்டார். வெஸ்டின் அறிவிப்பு பல எதிர்வினைகளை சந்தித்துள்ளது. இருப்பினும் பலரும் அவருக்கு வாக்களிப்பதாகக் கூறுகின்றனர்.
பாரிஸ் ஹில்டனுக்கும் இதைப் போன்ற ஆதரவுகளும், சமூக ஊடகங்களில் ரசிகர்களின் அன்பும் கிடைத்து வருகிறது. அவர்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வருவதற்கு உண்மையில் பாரிஸுக்கு வாக்களிப்போம் என்றும் கூறுகின்றனர். அதே சமயம், இதனை தாங்கள் கலாய்க்க கிடைத்த வாய்ப்பாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பயன்படுத்துகின்றனர். டொனால்ட் டிரம்ப் 2015 ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்ததிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டதல்ல என்றும் டிரம்பும் ஒரு ரியாலிட்டி டிவி நட்சத்திரமாக முன்பு இருந்ததையும் குறிப்பிட்டனர். இருவருக்கும் சொந்த ஹோட்டல்கள் கூட உள்ளன. அதனால் ஹில்டன் நிச்சயம் ஒரு போட்டியாளராக இருக்கலாம் எனவும் பதிவிடுகின்றனர் என மூவிவெப்.காம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், கெய்ன் வெஸ்ட் மற்றும் பாரிஸ் ஹில்டன் ஆகியோர் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதில் தீவிரமாக இருக்கிறார்களா அல்லது இது தொடர்பாக ஏதேனும் உத்தியோகபூர்வ ஆவணங்களை தாக்கல் செய்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியாகினும், அமெரிக்க அதிபர் தேர்தல் நம்மூர் உள்ளாட்சி தேர்தல்களில் நடக்கும் கலாட்டாக்களை போல இல்லாமல் இருந்தால் சரி என்கின்றனர் நம்மூர் நெட்டிசன்கள்.
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,”