மலையாள நடிகர் திலீப் கடந்த 2017ஆண்டில் நடைபெற்ற நடிகை பாவனா கடத்தல், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த நான்கு வருடங்களாக வேகம் எடுக்காமல் முடங்கி கிடந்த இந்த வழக்கு தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதற்கு காரணம் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் அவருக்கு எதிராக திரும்பி, திலீப் ஜாமீனில் வெளிவந்த பின் நடிகை கடத்தல் சம்பந்தமான வீடியோ கிளிப்புகளைப் பார்த்தார் என சில பரபரப்பான தகவல்களை சமீபத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலமாகப் பதிவு செய்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் திலீப் மீது புதிய வழக்கு பதிவு செய்தனர். மேலும் திலீப்பை விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். நீதிமன்றமும் அதற்கான அனுமதி வழங்கியது. ஆனால் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று நினைத்த திலீப், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல், தனக்கு முன்ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே நான்கு முறை இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைத்த நீதிமன்றம் சனிக்கிழமை அந்த மனுவை விசாரித்தது.
இதைத் தொடந்து நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், “இன்றிலிருந்து (ஞாயிறு) தொடர்ந்து மூன்று நாட்கள் திலீப் கேரளா க்ரைம் பிராஞ்ச் போலீஸார் முன்பு விசாரணைக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நேரில் ஆஜராக வேண்டும். ஏதாவது காரணங்களை சொல்லி விசாரணைக்கு வராமல் தவிர்ப்பதோ அல்லது வேறுவகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தினாலோ, அவருக்கு முன்ஜாமீன் கிடைப்பதை அது தடை செய்து விட வாய்ப்பிருக்கிறது. மேலும் திலீப்பிடம் செய்த விசாரணை குறித்து வரும் ஜனவரி 27ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 27 அன்று இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நடக்கும். அன்றைய தேதி வரை திலீப்பை போலீஸார் கைது செய்ய கூடாது” என உத்தரவிட்டுள்ளது.
**- இராமானுஜம்**
�,