விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் வருகிற ஜனவரி 13- ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் படத்தின் டீஸர், புரோமோ வெளியாகி வைரலானது. கூடுதலாக, அனிருத் இசையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்துக்கான சிறப்புக் காட்சிகள் காலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கான முன்பதிவுகள் தற்பொழுது நடந்துவருகிறது. ஆனால், இன்னும் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி தரவில்லை.
இந்நிலையில், சிறப்புக்காட்சிக்கான கட்டணம் குறித்து விசாரித்தால், ஆயிரத்து நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. 100% சீட் நிரப்ப தடை ஏற்பட்டிருப்பதால், வசூலை எடுத்தாக வேண்டும் என்பதற்காக டிக்கெட் விலையை அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. திரையரங்கத்தினருக்கும் இந்த வாய்ப்பை விட்டால் வேறு வழி இல்லையென டிக்கெட் விலையை அதிகரித்து விற்கிறதாகத் தெரிகிறது.
பொதுவாக விஜய் படங்கள் ரிலீஸின் போது, இப்படியாக அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படும். இந்தமுறை கொரோனா அச்சுறுத்தலினால் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் நிலையில், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ய வேண்டாம் என ஏற்கெனவே விஜய் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
விஜய் வேண்டுகோளையும் மீறி, இப்படியாக அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடைபெற்றுவருகிறது. இப்போதைய சூழலில் மாஸ்டர் படத்தை நம்பியே திரையரங்குகள் இருக்கிறது. அப்படி இருக்கையில், இப்படி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதால் மக்களும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
அதோடு, திரையுலகம் உயிர்பெற இருக்கும் ஒரே வாய்ப்பாக மாஸ்டர் படம் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், இப்படியான செயல்முறை தவறான பாதைக்கே வழிவகுக்கும் என வருந்துகிறார்கள் மாஸ்டர் படக்குழுவினர். இந்த விஷயம் விஜய் அறிவாரா? அப்படி தெரிந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்றும் தெரியவில்லை.
**-ஆதினி**�,