நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கங்களுக்குப் புத்துயிர் கிடைத்திருக்கிறது. கொரோனா தளர்வின் படி, திரையரங்குகள் 100% இருக்கை அனுமதியுடன் கொண்டாட்டத்துக்குத் தயாராகிவருகிறது. இந்த கொண்டாட்டத்துக்கெல்லாம் ஒரே காரணம் விஜய்யின் மாஸ்டர். இந்த மாஸ்டரோடு கூடுதலாக மூன்று படங்கள் இந்தப் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
**மாஸ்டர்**
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது மாஸ்டர். விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் யு/ஏ சான்றோடு வெளியாகிறது. கடந்த வருடம் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது, கொரோனாவினால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. மாஸ்டரின் ரிலீஸ் தான், பழையபடி திரையரங்குகள் இயங்க வழியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**ஈஸ்வரன்**
மாஸ்டரோடு திரையரங்கில் நேரடியாக மோத இருக்கும் படம் ஈஸ்வரன். சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகிறது ஈஸ்வரன். கொரோனா தளர்வின் போது, படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்த போது, வெறும் 28 நாட்களுக்குள் சிம்புவை வைத்து திண்டுக்கல் பகுதியில் படப்பிடிப்பை முடித்தார் சுசீந்திரன். உடனடியாக பிற பணிகள் முடிந்து, சிம்புவின் விருப்பப்படியே பொங்கல் ரிலீஸூக்குத் தயாராகியும் விட்டது. மாஸ்டர் 13ஆம் தேதி வெளியாவதால், அன்றைய தினம் மாஸ்டரோடு போட்டி போட்டால் டிக்கெட் விற்பனையாகாது என்பதை உணர்ந்து, அதற்கு அடுத்த நாள் படத்தை ரிலீஸ் செய்கிறது படக்குழு.
**மாறா**
2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைச் சிறப்பாக வெளியான மலையாளப் படம் ‘சார்லி’. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் மாறா. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் திலீப் குமார் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் ஸ்பெஷலாக நேரடியாக ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் வருகிற ஜனவரி 8ஆம் தேதி வெளியாகிறது மாறா. மலையாளத்தில் ஒரிஜினல் வெர்ஷன் பட்டாசாக இருக்கும். தமிழ் வெர்ஷன் எப்படி இருக்கிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
**பூமி**
பண்டிகை காலம் என்றாலே திரையரங்கில் மட்டும் தான் புதுப்படம் என்னும் வழக்கம் மாறி, ஓடிடியிலும் இனி, புதுப்படங்கள் வெளியாகும். அப்படி, ஜெயம்ரவி நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகிறது பூமி. ஜெயம்ரவியின் 25வது படமாக லக்ஷ்மண் இயக்கத்தில் ஜனவரி 14ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது பூமி. ஜெயம் ரவியுடன் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்னையை மையமாக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது.
**-ஆதினி**�,”