தமிழ் சினிமாவும், அரசியலும் இணைபிரியாத நண்பர்களாகவே கடந்த 75 ஆண்டுகளாக பயணித்து வந்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு சினிமாவைப் பயன்படுத்தினார்கள். அந்த வழியில் எம்ஜிஆர் தமிழக அரசியலில் ஆளுமை மிக்க சக்தியாக மாறி தமிழக முதல்வராக உச்சம் தொட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அண்ணா திமுக ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அரசியல் ரீதியான பொதுக்கூட்டம் மற்றும் பயணங்களை மேற்கொண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு அரசியல் ஆசை இருந்தாலும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்னும் ஆளுமைகள் இருக்கும்போதே தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தல் அரசியலை சந்தித்தவர் விஜயகாந்த் மட்டும் தான். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆளும் அரசுக்கு எதிராக அரசியல் பேச தொடங்கினார்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும். இருந்த போதிலும் கமல் மட்டுமே உடனடியாக கட்சியைத் தொடங்கினார்.
ரஜினிகாந்த், தேர்தல் வரும்போது கட்சியைத் தொடங்கி நேரடியாக தேர்தலை சந்திப்பேன் என்று அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் இரண்டையும் சாதுரியமாகத் தவிர்த்த ரஜினிகாந்த், ‘தனக்கு முதல்வர் பதவி ஆசை இல்லை, நேர்மையானவர்கள் கறை படியாதவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கு மக்களிடம் எழுச்சி வரவேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதைப் பற்றிய விவாதங்கள் ஊடகங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் ஆளும் அரசுகளுக்கு எதிராகத் தனது படங்களில் பஞ்ச் டயலாக்குகள் பேசுவதை வழக்கமாக கொண்ட நடிகர் விஜய், தனது படங்களுக்கு பிரச்னை என்று வருகிறபோது தமிழக முதல்வர் பொறுப்பில் இருப்பவர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போதைய சூழ்நிலையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக நடிகர் விஜய் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து விடக்கூடாது என்பதில் ஆளும் கட்சிகள் தீவிரமான நிலையெடுத்து இருக்கிறது.
சினிமா நடிகர்களைப் பொறுத்தவரை வாங்குகின்ற சம்பளத்தை நேர்மையாகக் கணக்கு காட்டி, வருமான வரி செலுத்துவதில் பலவீனமானவர்களாகவே இருந்து வருகின்றனர். இதனை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு விஜய் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், அவர்களுக்கு நிதியுதவி செய்யும் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தி விஜய்க்கு நெருக்கடி கொடுத்தனர். பொதுவாக கல்லூரி மைதானங்கள், தனியார் அரங்கங்களில் விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெறும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுவதற்கு சில தினங்கள் முன்பு வரை வருமான வரித்துறை சோதனை, விசாரணை என்கிற முறையில் நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப் பட்டிருக்கும் நிலையில் இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த விழாவை தமிழ் சினிமா மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளே உற்றுநோக்க தொடங்கியிருக்கிறது. ஆளும் அரசுக்கு எதிராக விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்வாரா? அரசியல் பேசுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசுவதில்லை, படத்தைப் பற்றி மட்டுமே பேசுவது என்கிற முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரசியல் பேசுவார் என்கிறது விஜய் தரப்பு வட்டாரம். அதற்கு பதில் சொல்லும் விதமாக விஜய் பேசுவதற்கு விஜய் சேதுபதி வழிவகுத்துக் கொடுப்பார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.
சுமார் 800 பேர் மட்டும் அமரக்கூடிய அரங்கத்தில் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 400 பேருக்கு மட்டுமே தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய டிக்கெட்டுகள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி தன்னுடைய விளம்பரதாரர்களுக்கு விநியோகம் செய்துள்ளது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சூழலில் விழாவிற்கு இரண்டு மணிக்கு முன்னதாகவே அரங்கத்திற்கு வந்து விடுமாறு அழைப்பிதழ் கொடுக்கும் பொழுது தகவல் கூறப்பட்டிருக்கிறது.
மாஸ்டர் ஆடியோ விழாவில் அரசியல் வெடிகுண்டு வீசப்போவது கதாநாயகனா அல்லது வில்லனா என்பதை எதிர்நோக்கி தமிழ் சினிமாவும் தமிழக அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.
**-இராமானுஜம்**�,