இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பொறுப்புமிக்க திரப்படங்களை வழங்கிவருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படம் செம ஹிட். இவர், தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி’ படங்களுக்கு நல்ல வரவேற்பு. அடுத்ததாக, மீண்டும் மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் பா.ரஞ்சித். பரியேறும்பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரிசெல்வராஜின் மூன்றாவது படமிது.
பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவன தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் ‘சியான் 60’ படமான ‘மகான்’ ஷூட்டிங்கை முடித்துவிட்டார் துருவ். தற்பொழுது, மாரிசெல்வராஜ் பாடத்திற்கான முதல்கட்ட தயாரிப்பு பணிகளில் இருக்கிறார்.
இந்தப் படத்தில் கபடி விளையாட்டு வீரராக துருவ் நடிக்க இருக்கிறார். பிரபல கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருவதாக தகவல். அதோடு, முதல் கட்டமாக, கபடி பயிற்சியை மேற்கொண்டுவருகிறார் துருவ். இதற்காக, தூத்துக்குடியிலிருந்து கபடி வீரர்கள் சென்னை வந்திருக்கிறார்கள். தொடர்ச்சியான பயிற்சிகள் கடந்த தினங்களில் நடந்துவந்திருக்கிறது. முதல்கட்டப் பயிற்சியை சிறப்பாக முடித்துவிட்டார் துருவ் என தகவல்.
சென்னையில் கபடி பயிற்சியாளர்கள் இல்லையா என கேட்கலாம். ஒவ்வொரு ஊரிலும் கபடி விளையாட்டில் ஒரு டெக்னிக் இருக்கும். அதுவும், தென்மண்டல கபடி வீரர்களின் விளையாட்டு டெக்னிக் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நேட்டிவிட்டியில் அதிக கவனம் செலுத்துபவர் மாரிசெல்வராஜ். அதனால், இந்த ஏற்பாடாம்.
கூடுதலாக, தூத்துக்குடி மக்களின் பேச்சு மொழிக்கான பயிற்சியும் சிறப்பாக கொடுத்து வருகிறாராம் மாரிசெல்வராஜ். அதோடு, இந்தப் படத்துக்காக பல டைட்டில்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் . குறிப்பாக, ‘மதுரை வீரன்’ எனும் டைட்டில் வைக்கலாமா என்பது குறித்தப் பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருப்பதாகத் தகவல்.
**- ஆதினி **
�,