இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியை 16ம் நூற்றாண்டில் ஆண்ட சாமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதிகளாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தில் நான்காவது மரைக்காயராக இருந்த முகமதலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் திரைக்கதை எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள படம் இது.
அந்தமான் சிறைச்சாலையை மையமாக வைத்து மோகன்லால் – பிரபு நடிக்க பிரியதர்ஷன் இயக்கிய(தமிழில் சிறைச்சாலை) ‘காலாபாணி’ பெரும் வரவேற்பைப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பின் அதே கூட்டணியில் 90 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் இது.
சாமூத்திரிகள் ஆளும் கோழிக்கோடு நாட்டில் தந்தையை இழந்த முகமதலி குஞ்ஞாலி (மோகன்லால்), பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார்.
அந்த நாட்டை போர்ச்சுகீசியர்கள் ஆக்கிரமிக்க படையெடுக்கிற போது, கொள்ளைக்காரனான குஞ்ஞாலிக்கு கடற்படைத் தளபதி பதவி கொடுக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்களை முறியடிக்கிறான் குஞ்ஞாலி.
இதனால், அரசவையில் அவனது மதிப்பு உயர்கிறது. இந்த நேரத்தில் குஞ்சாலிக்கு நெருக்கமான தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் காதல் எல்லா சமன்பாடுகளையும் மாற்றிவிடுகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
குஞ்ஞாலியின் உண்மையான வரலாற்றிலிருந்து சற்று மாற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன.
படம் தொடங்கி கிட்டத்தட்ட முதல் பாதி முழுக்கவே புதிது புதிதாக கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். கதாபாத்திரங்களின் பெயர்களையும், அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்குள்ளாகவே பாதிப் படம் முடிந்து விடுகிறது.
குஞ்ஞாலி மரைக்காயராக மோகன்லால். கதைக்களத்துக்கு ஏற்ப ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் வேற யாரையும் நினைத்துப் பார்க்க முடியாதபடி சின்ன சின்ன மேனரிசங்களிலும் கூட அசத்துகிறார்.
இளவயது மரைக்காயராக வரும் ப்ரணவ், மோகன்லாலுக்கு இது பேர் சொல்லும் படமாக இருக்கும். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.
படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே திரைக்கதைதான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் ஆங்காங்கே சில நல்ல காட்சிகள் இருந்தாலும் அதனை ஒன்றாக இணைக்கக் கூடிய சுவாரஸ்யம் திரைக்கதையில் இல்லாததால் சலிப்பை ஏற்படுத்துகிறது.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது என்றால் அது கிராபிக்ஸ் தான். இதுவரை ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ போன்ற ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து வியந்த போர்க்கள காட்சிகளை கண்முன்னே நிறுத்தியதில் காட்சிக்குக் காட்சி கிராபிக்ஸ் குழுவினரின் உழைப்பு வியக்கவைக்கிறது. அதே அளவுக்கு கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் உழைப்பு பிரமிக்கவைக்கிறது
இந்தக் கதை முழுக்க கேரளாவில் நடந்தது. ஆனால், படத்தில் வரும் கோட்டையும் படத்தில் வருபவர்கள் அணிந்திருக்கும் உடைகளும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்படும் உடைகளை நினைவுபடுத்துகின்றன.
படத்தில் போர்க்களக் காட்சிகள் பார்வையாளனை பிரமிக்க வைக்கின்றன. முதல் பாதியின் முடிவில் போர்த்துக்கீசியப் படைகளை மரைக்காயரின் படைகள் வெல்லும் காட்சியையே உதாரணமாக சொல்லலாம். அதே போல இரண்டாம் பாதியில் சாமூத்ரி படைகளுக்கும் மரைக்காயர் படைகளுக்கும் நடக்கும் யுத்தமும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உலகத் தர கிராபிக்ஸ், மிகச்சிறந்த நடிகர்கள், பின்னணி இசை என ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்துக் காரணிகளும் இருந்தும் திரைக்கதையின் தொய்வினால் ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய படமாக நின்று விடுகிறது ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’.
படத்துக்கு இசை ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல். ஒரு வரலாற்றுப் படத்துக்கு எது தேவையோ அதைக் கொடுத்து படத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.
அந்நியரை எதிர்த்துப் போராடும் வீரனின் கதை எத்தகைய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால், அப்படியேதும் திரைக்கதையில் நடக்கவில்லை. மோகன்லாலுக்கு தண்டனை வழங்கப்படும் காட்சி அப்படியே மெல்கிப்ஸனின் பிரேவ் ஹார்ட்” படத்தின் மறுபதிப்பாக இருக்கிறது
உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி வந்த பிரியதர்ஷன், வரலாற்று கதைகளையும் தன்னால் இயக்க முடியும் என்பதை காட்டியுள்ளார். ஏற்கனவே வாழ்ந்த ஒரு வீரனின் கதை தான் என்பதால் மிகப்பெரிய பில்டப் காட்சிகள் எல்லாம் இல்லாமல், கதையின் போக்கிலேயே படத்தை நகர்த்தி சென்றுளார்.
படத்தின் நீளத்தை குறைத்து திரைக்கதையின் வேகத்தை கூட்டியிருந்தால் குஞ்ஞாலி மரைக்காயருக்கு மிகச்சிறந்த சமர்ப்பணமாக அமைந்திருக்கும். ஒரு வரலாற்று படமாக உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் இப்படிக்கூட படம் எடுக்க முடியுமா என்கிற பிரமிப்பை நம் மனதில் ஏற்றி அனுப்பி வைக்கிறார் பிரியதர்ஷன்.
**-இராமானுஜம்**
�,”