மலையாளத்தில் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘மரைக்கார் – அரபிக் கடலின்டே சிம்ஹம்’ படம் வெளியாவது ஓடிடி, தியேட்டரில் என மாறி மாறி தகவல்கள் வெளியானது. இறுதியாக ஓடிடியில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிலையில் படம் முதலில் தியேட்டர்களில் வெளியாகும் என்று கேரள கலை துறையின் அமைச்சரான ஷாஜி செரியன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘மரைக்கார் – அரபிக் கடலின்டெ சிம்ஹம்’. கோழிக்கோட்டை சேர்ந்த மரைக்கார் வெள்ளையர்களுக்கு எதிராக நடத்திய கடற்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இவர்தான் வெள்ளையனுக்கு எதிராக முதலில் கடற்படை அமைத்தவர் என்கிறார்கள் மலையாள மக்கள்.
இந்தப் படத்தில் ‘மரைக்கார்’ கதாபாத்திரத்தில் மோகன் லால் நடித்திருக்கிறார். மேலும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் சீன நடிகர்களின் பங்களிப்பில் இந்தப் படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்
இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா இரண்டாம் அலையால் தள்ளிப்போனது. அப்போது படத்தை ஓடிடியில் வெளியிட முன்னணி ஓடிடி நிறுவனங்கள் முயன்றன. ஆனால், மோகன் லால், பிரியதர்ஷன், ஆண்டனி பெரும்பாவூர் மூவரும் படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் உறுதியாக இருந்தனர்.
இறுதியில் ஆகஸ்ட் 12 ஓணத்தை முன்னிட்டு வெளியிட முடிவானது. முதல் 25 தினங்கள் ‘மரைக்கார்’ படத்தை மட்டும் கேரளா முழுவதும் உள்ள திரையரங்குகளில் தனியாக வெளியிடுவது என்று முடிவானது. நான்கு வாங்களுக்குப் பிறகே படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனாலும், கேரளாவில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வராததால் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்கவில்லை. இதனால் பட வெளியீடும் தள்ளிப்போனது.
அப்போதும் படத்தை திரையரங்கில் வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்தனர்.அக்டோபர் 25 முதல் கேரளாவில் ஐம்பது சதவிகிதப் பார்வையாளர்களுடன் படத்தை வெளியிட அரசு அனுமதித்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரவில்லை. இதனால் மரைக்கார் படத்துக்கு முன்பு பேசியதைவிட குறைவான பணமே
தர முடியும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூற, படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தந்தார்.
இந்த நிலையில், அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டது. அமைச்சர் ஷாஜி செரியன், மரைக்கார் படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும். திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில்தான் வெளியாக வேண்டும். பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதே கேரள அரசின் கொள்கை. அடுத்த வருடம் அரசே ஓடிடி தளம் ஒன்றை தொடங்கும் என்றார்.
அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவில் படத்தை நேரடியாக வெளியிட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஒப்பந்தம் செய்தார். இது மலையாள சினிமா உலகத்தில் புயலை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து மோகன் லாலின் அடுத்த நான்குப் படங்களும் ஓடிடியில் வெளியாகும் என செய்தியும் வெளியானது. இதனால் கேரள அரசு மீண்டும் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர்கள் – தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தை தியேட்டரில் திரையிட தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மரைக்கார் படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அமைச்சர் ஷாஜி செரியன் அறிவித்தார்.
கேரள சினிமா சரித்திரத்தில் ஒரு மாநில அமைச்சர் பட வெளியீட்டை அறிவித்தது இதுவே முதன்முறையாக இருக்கும். படம் வெளியீட்டுக்கு முன்பு திரையரங்குகளில் 100 சதவிகிதம் பார்வையாளர்கள் அனுமதி, வேறு சில சலுகைகளை அரசு அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. ‘மரைக்கார்’ படத்தின் தியேட்டர் வெளியீடு கேரளாவில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
**-இராமானுஜம்**
�,