oதிரைவிமர்சனம் : மாறா – படம் எப்படி இருக்கு?

Published On:

| By Balaji

முன்பின் பார்த்திராத ஒருவனைத் தேடிப் பயணிக்கும் ஒரு பெண்ணின் கதையே மாறா பட ஒன் லைன். மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா நடிப்பில் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் ரீமேக் படமே மாறா. துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு நடிப்பில் 2015ல் வெளியான சார்லி படத்தின் தமிழ் வெர்ஷனே இந்த மாறா. படம் எப்படி இருக்கிறது?

நாயகி பாரு (ஷ்ரத்தா) சிறுவயதில் ஒரு கதை ஒன்றைக் கேட்கிறார். அந்தக் கதை அவரின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அந்தக் கதை கொடுத்த ஆச்சரியங்களோடு வளர்கிறார். பழைய கட்டிடங்களைப் புதுப்பிக்கும் கலைஞரான இவருக்கு, வீட்டில் திருமண ஏற்பாடுகள் துவங்குகிறது. அதனால் வீட்டிலிருந்து வெளியேறி, தோழியின் உதவியுடன் வேறு இடத்துக்குச் செல்கிறார். அந்தக் கிராமத்தில் சிறுவயதில் ஷ்ரத்தா கேட்ட கதைக்கு உயிர்கொடுத்து, ஊர் முழுவதும் ஓவியமாக தீட்டி வைத்திருக்கிறார் நாயகன் மாறா (மாதவன்). பாருவுக்கு மட்டுமே தெரிந்த கதை, மாறாவுக்கு எப்படித் தெரிந்தது? யார் இந்த மாறா என தேடிச் செல்லும் பாருவின் பயணமே திரைக்கதை.

ஒரு ரீமேக் படத்தில் இருக்கும் அனைத்துப் பிரச்னையும் இந்தப் படத்திலும் இருக்கிறது. ஏற்கெனவே பார்த்துவிட்ட கதையை, மீண்டும் ஒருமுறை புதிய முகங்களோடு திரையில் பார்க்கும் போது ஒப்பீடுகள் தவிர்க்க முடியாததாகிறது. ஒரிஜினல் சார்லிக்கும், இந்தப் படத்துக்கும் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் திலீப் குமார். இருப்பினும், ஒரிஜினல் வெர்ஷன் தந்த பிரமிப்பை, ஆச்சரியத்தை இந்தப் படம் கொடுக்கத் தவறியிருக்கிறது. ஒரிஜினாலிட்டிக்காக, மலையாளத்தில் களமான கேரளத்திலேயே, இந்தப் படத்தின் கதையையும் நகர்த்தியிருப்பது நேட்டிவிட்டி குளறுபடி நேராமல் தவிர்த்திருக்கிறது.

நினைத்த நேரத்திற்கு எங்கு வேண்டுமென்றாலும் செல்லும் வானம்பாடி பறவையாக இருப்பார் துல்கர். தமிழில், மாதவன் நடித்திருப்பதால், அனுபவமிக்க கேரக்டராக மாறா பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். பொறுமையாகப் பேசுகிறார், நிதானமாக வருகிறார், அறிவுரை கூறுகிறார் என்று வேறு மாறி இருக்கிறது. நடிப்பில் மாதவன் பெஸ்ட் என்றாலும், துல்கரிடம் பார்த்த புத்துணர்வு இங்கு மிஸ்ஸிங்.

குழந்தைத் தனமான சிரிப்பு, கொஞ்சும் பார்வை, ஆச்சரியப்படுத்தும் கண்கள் என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருப்பார் நடிகை பார்வதி. தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. எல்லா சீனுக்கும் ஒரே ரியாக்‌ஷன் தான். அவரால் முடிந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் என்பது மறுப்பதற்கில்லை. ஒரிஜினலில் கல்பனா நடித்த விலைமாது கதாபாத்திரத்தில் தமிழில் விருமாண்டி அபிராமி நடித்திருக்கிறார். ஹெச்.ஐ.வி-யினால் இறந்துபோகும் கல்பனா மீது வரும் இரக்கம், துளி கூட அபிராமி மீது வரவில்லை.

இசையால் சிரிப்பையும் கலந்து கொடுத்த மியூசிக் வொண்டர்லேண்ட் அலெக்ஸூக்கு வெல்கம். படத்தில் திருடனாக அசத்தியிருக்கிறார். மெளலி, கிஷோர், குருசோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர் என ஒவ்வொரு கேரக்டருமே தனித்துவம் தான். ஆனால், கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் இடத்தில் சுவாரஸ்யம் பெரிதாக இல்லை. இன்னும் உயிரூட்டியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. குறிப்பாக, மெளலியின் நடிப்பில் செயற்கை தனம் தெரிகிறது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஷிவதாவின் புதிய லைஃப் , நடிப்பு, அது தரும் நம்பிக்கை எல்லாமே சூப்பர்.

ஷ்ரத்தா சுற்றித்திரியும் இடமெங்கும் இருக்கும் கலைப் பொருட்கள், ஓவியம் என காட்சியை அழகாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் அஜயன். அதுபோல, காட்சியின் அழகியலுக்குப் பெரிய பலம் தினேஷ் கிருஷ்ணன் & கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு. ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்டதும் மனதில் இறங்குகிறது.

சார்லியில் துல்கரை ஒரு தேவதூதன் போல வடிவமைத்திருப்பார்கள். அது ஒரு கற்பனைப் பாத்திரமாக இருக்கும். யாருக்கு உதவி தேவையோ அந்த இடத்தில் சார்லி இருப்பான். தேடுகிறவர்கள் கண்ணில் படமாட்டான், ஆனால், எல்லா இடத்திலும் நிறைந்திருப்பான். அப்படியான ஒரு மேஜிக்கல் மொமண்ட் மாறாவில் மாதவனிடம் குறைவாக இருக்கிறது.

அசலை விட தமிழில் 15 நிமிடம் அதிகம் தான் என்றாலும், காட்சி நகர்வில் அலுப்பு தட்டவில்லை. ஒரிஜினலில் இருந்த ஆத்மா, நகலில் குறைவு என்பதே பிரச்னை. மலையாள சார்லி பார்க்காதவர்களுக்கு, மாறா புது அனுபவம் தரும். ஆனால், கையோடு, சார்லியும் பார்த்துவிட்டால், மாறா மனதிலிருந்து மறைந்துவிடும் என்பதே நிதர்சனம்.

**-ஆதினி**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share