நடிகை மஞ்சிமா மோகன் தனது உடல் குறித்தான கேலிகளுக்கு சமூக வலைதள பக்கத்தில் விரிவாக பேசியுள்ளார்.
உடல் கேலிகளை எதிர்கொள்வது என்பது சாதாரண மனிதர்கள் ஆரம்பித்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வரை தொடர்கிறது. அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு உடல் கேலிகள், தங்களது நிறம் குறித்தான விமர்சனங்கள் என்பது அழுத்தமாகவே மாறி வருகிறது.
ஆனால், பாலிவுட்டில் வித்யா பாலன் தொடங்கி கோலிவுட்டில் சமீரா வரை இதனை எதிர்கொண்ட நடிகைகள் பலரும் இது குறித்து உடைத்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய அதிகரித்துள்ள உடல் எடை பற்றியும் உருவ கேலி பற்றியும் பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் கேலி குறித்து வித்யா பாலன் முன்பு பேசிய வீடியோ ஒன்றை மஞ்சிமா பகிர்ந்து, ‘நாம் எந்த உடல் எடையில் இருக்கிறோம் என்பதை விட ஆரோக்கியமாக இருக்கிறோமோ என்பது தான் முக்கியம். எல்லாருடைய உடலும் இங்கு வேறு வேறு. ஒரு சிலருக்கு எளிதாக இருக்கும். வேறு சிலருக்கும் கடினமானதாக இருக்கலாம். அதனால், தயவு செய்து பிறரை உடல் கேலி செய்வதை நிறுத்துங்கள்.
ஏனென்றால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியாது. நீங்கள் உடல் கேலி செய்வதால் அவர் உடல் எடையை குறைப்பாரா என்றால் அது நிச்சயம் நடக்காது. அதற்கு பதிலாக அவர்களின் நம்பிக்கையை தான் உடைக்கிறீர்கள். தினமும் ஒருவர் இதனை எதிர்கொள்கிறார். நீங்கள் உங்கள் உடலையும் மனதையும் பாசிட்டிவாக வைத்து கொள்ளுங்கள்’ என நம்பிக்கையை விதைக்கும் விதமாக பேசி இருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல், ‘குண்டம்மா, நீங்கள் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் இல்லை என்றால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது’ என்பது போன்ற கமெண்ட்டுகளையும் பகிர்ந்து, ‘இது போன்ற விமர்சனங்களை பிறர் வாழ்க்கையில் வைக்காதீர்கள். வாழு! வாழ விடு!!’ என அதில் பதிவு செய்திருக்கிறார்.
**ஆதிரா**