ஆஸ்கர் போட்டியில் மண்டேலா: மகிழ்ச்சியில் யோகிபாபு

Published On:

| By Balaji

தமிழ்நாட்டு அரசியலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையக்கருவாக கொண்டு சமூக அவலங்களை விமர்சித்த திரைப்படம் மண்டேலா

படைப்பு ரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட மண்டேலா திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கு முன்பு நடத்தப்படும் தேர்வு பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகள் சார்பிலிருந்து பல படங்கள் இந்த விருதுக்குப் போட்டியிடுகின்றன. அந்தவகையில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022மார்ச் 27ல் நடக்கிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும்.

அந்தவகையில் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளத் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலிருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில் தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி பாராட்டைப் பெற்ற மண்டேலா படமும் தேர்வாகி உள்ளது.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை. நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியானது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த படம் தவிர்த்து இந்தியில் வித்யா பாலன் நடித்த ஷெர்னி, விக்கி கவுஷல் நடித்த சர்தார் உதம், மலையாளத்தில் நாயாட்டு உள்ளிட்ட 14 படங்கள் தேர்வாகி உள்ளன. இந்த 14 படங்களிலிருந்து ஒரு படத்தை இயக்குநர் ஷாஜி கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள். அந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த 14 படங்களில் எந்த படம் ஆஸ்கர் செல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனிடையே இதுபற்றி மண்டேலா படத்தின் கதைநாயகன்யோகி பாபுவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு காமெடி நடிகரின் படம் ஆஸ்கர் பரிந்துரைக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மக்கள் கொடுத்த வரவேற்பு தான் காரணம். ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share