இத்தனை கோடியா? அதிர்ந்த நிறுவனம், தோல்வியில் வியாபாரம் !

Published On:

| By Balaji

கொரோனாவுக்குப் பிறகு நடிப்பில் தீவிரம் காட்டிவருகிறார் சிம்பு. அதற்கு சாம்பிளாக வெளியான படம் ‘ஈஸ்வரன்’. லாக்டவுன் தளர்வின் போது, குறைவானக் காலக்கட்டத்துக்குள் சொன்ன தேதிக்கு முன்னாடியே இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அப்படி, பாரதிராஜா, சிம்பு நடிக்க பொங்கலுக்கு வெளியானது ஈஸ்வரன்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டருடன் போட்டியாகக் களமிறங்கியதால் வசூலிலும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் , தமன் இசையில் பாடல்கள் ஹிட்டானது. குறிப்பாக, ‘மாங்கல்யம்’ பாட்டு செம ரீச். இந்தப் படம் வெளியாகி சில மாதங்களாக ஒளிபரப்பு உரிமையை எந்த தொலைக்காட்சி நிறுவனமும் வாங்கவில்லை. கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது. அதற்கு, தயாரிப்பாளர் சொன்ன பட்ஜெட் காரணம் என்று தகவலும் அந்த நேரத்தில் வெளியானது. அதாவது, தொலைக்காட்சி உரிமையாக 10 கோடியை ஈஸ்வரன் தயாரிப்பு தரப்பு கேட்டது. சாட்டிலைட் நிறுவனமும் முடியாதென சென்றுவிட, இறுதியாக, 3கோடிக்கு படத்தை விற்றனர். இது பழைய சம்பவம்.. அடுத்து, புதிய சம்பவத்துக்கு வருவோம்!

ஈஸ்வரனைத் தொடர்ந்து, அடுத்ததாக ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் மாநாடு செட் அமைத்து படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.

சமீபத்தில், யுவன் இசையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. 24 மணிநேரத்துக்குள் நடக்கும் கதை, அப்துல் காலிக் எனும் முஸ்லீம் இளைஞராக சிம்பு நடித்திருக்கிறார், அரசியல் படமென்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கொரோனா காலக்கட்டமென்பதால், மாநாடு படத்தை ஓடிடியில் வெளியிடவும் ஒருபக்கம் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படி, புதிதாக தமிழில் களமிறங்க தயாராகிவரும் சோனி லிவ் நிறுவனத்திடமும் ‘மாநாடு’ ஓடிடி உரிமைக்கானப் பேச்சுவார்த்தை போயிருக்கிறது. தமிழில் களமிறங்குவதால், ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களையும் தேடிப்பிடித்து வாங்க முயற்சி எடுத்துவருகிறது சோனி லிவ்.

இந்நிலையில், மாநாடு படத்துக்கு சோனி லிவ் ஒரு குறிப்பிட்ட தொகையை மனதில் வைத்திருந்ததாம். ஆனால், தயாரிப்புத் தரப்பு அதிலிருந்து இரண்டு மடங்கு கூடுதலாக தொகை கூறியிருக்கிறது. மாநாடு படத்தினை டிஜிட்டல் தளமான ஓடிடியில் ப்ரீமியர் செய்வதற்கு 40 கோடி விலை கூறியிருக்கிறது தயாரிப்புத் தரப்பு. இது, தொடர்ச்சியாக வசூல் அடிப்படையில் நல்ல படங்களைத் தரும் நடிகர்களுக்கான படத்தின் விலை.

ஏற்கெனவே, சிம்புவுக்கு ஈஸ்வரன் பெரிதாகப் போகவில்லை. முந்தைய படத்தை மனதில் கொண்டே அடுத்தப் படத்தின் விலை நிர்ணயமாகும். அப்படியிருக்கையில், மாநாடு படத்துக்கு டிஜிட்டல் உரிமைக்கே இவ்வளவு தொகையா என அதிர்ந்துவிட்டதாம் சோனி லிவ்.

படத்துக்காகப் பெரும் தொகையை செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதனால், படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்தே விலையை கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், விலையை குறைக்க ஓடிடி தரப்பில் பலதரப்பட்டப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இறுதியில், தோல்வியிலேயே முடிந்திருக்கிறது வியாபார பேச்சுவார்த்தை.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share