வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள புதிய படத்திற்கு மன்மதலீலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்த படம் கே.பாலச்சந்தா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படத்தின் தலைப்பு. கலாகேந்திரா நிறுவனம் தயாரித்த படம் இது. வெங்கட் பிரபு தயாரிப்பு நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெறவில்லை.
இந்த தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று கே.பாலச்சந்தர் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1976ம் ஆண்டு, கலாகேந்திரா நிறுவனத்தின் பி.ஆர்.கோவிந்தராஜன், ஜே.துரைசாமி தயாரிப்பில், இயக்குநர் கே.பாலசந்தரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவானது மன்மத லீலை திரைப்படம். கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்த திரைப்படம். இந்த வருடத்தோடு வெளியாகி 46 வருடங்கள் ஆகப்போகிறது.
மன்மத லீலை என்கிற பெயரை, கலாகேந்திரா தயாரிப்பாளர்களின் அனுமதி இல்லாமல், இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு அனுமதி கொடுத்தது யார்? சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், தான் இயக்கும் திரைப்படத்திற்கு மன்மத லீலை பெயரை சூட்டி இருப்பது தவறான செயலாகும்.
கலாகேந்திரா நிறுவனத்தார்களிடம் பேசி, அனுமதி பெறாமல், இதே பெயரில் திரையிட்டால், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கமும், தமிழ் ரசிகர்களும் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். கலாகேந்திரா நிறுவனத்தார்கள், சட்ட ரீதியாக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மன்மத லீலை படத்தை முதல் பிரதி அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் லிங்கா சிங்காரவடிவேலனுக்காக இயக்கினார் வெங்கட்பிரபு. மன்மத லீலை படத்தலைப்பு அறிவிக்கப்பட்ட பின்பு அதற்கு எதிராக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததற்கு பதில் அளிக்கும் வகையில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது, “இயக்குனர் சிகரம் கேபாலசந்தர் அவர்களை மதிக்கிறோம், போற்றுகிறோம் அதற்காக 40 வருடங்களுக்கு முன்பு அவர் பயன்படுத்திய தலைப்பை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது, அதற்கு அனுமதி பெற வேண்டும் என கூறுவது நியாயமல்ல. இங்கு தயாரிப்பாளர்களுக்கு பலசங்கங்கள் உள்ளது. படம் தயாரித்து தணிக்கைக்கு அனுப்பப்படுகிற போது சங்கங்களிடம் ஒப்புதல் கடிதம் முன்பு தேவைப்பட்டது. இப்போது அது தேவையில்லை. யார் வேண்டுமானாலும் தணிக்கை துறை விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம் என்கிற நடைமுறை தற்போது உள்ளது. தெரியாமல் பேசுகின்றனர். மன்மத லீலை என்கிற தலைப்பு மத்திய அரசின் உரிய துறையில் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னரே தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பித்து பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சட்டரீதியாக எவரும் நீதிமன்றத்திற்கு போனால் அதனை உரிய வழியில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்
**-அம்பலவாணன்**
�,