தமிழில் விஜய் எப்படியோ, அங்கே அவுக… தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு. இவர் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய் ரசிகர்களாக இருக்கும் பலரும், நிச்சயம் மகேஷ் பாபு ரசிகர்களாகவும் இருப்பார்கள். ஏனெனில், விஜய் ஹிட் கொடுத்த எத்தனையோ படங்கள் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படங்களின் ரீமேக்தான். சரி, மகேஷ் பாபு நடித்து கடைசியாக திரைக்கு வந்தப் படம் ‘சர்லேறு நீக்கெவ்வறு’. அனில் ரவிப்புடி இயக்கத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தேவி ஸ்ரீபிரசாத் இசையில் படம் வெளியானது. படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை.
சொல்லப்போனால், மகேஷ் பாபுவுக்கு கடந்த சில வருடங்களில் வெளியான பிரம்மோட்சவம், ஸ்பைடர், பரத் ஆனே நேனு, மகரிஷி மற்றும் சர்லேறு நீக்கெவ்வறு என அனைத்துப் படங்களுமே தோல்விப் படங்களாக முடிந்துவிட்டது. நேரம் சரியில்லை என நினைத்துக்கொண்ட மகேஷ் பாபுவின் மிகப்பெரிய நம்பிக்கை ’சர்காரு வாரி பாட்டா’.
கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமன் இசையில் உருவாகிவருகிறது ‘சர்காரு வாரி பாட்டா’. இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். படத்துக்கான படப்பிடிப்பு துபாயில் நடந்துவந்த நிலையில், படத்துக்கான முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கிறது படக்குழு.
படத்துக்கான மேக்கிங் வீடியோ ஒன்றை விரைவில் வெளியிட இருக்கிறதாம் படக்குழு. அதோடு, மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணாவின் பிறந்த தினத்தன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றையும் வைத்திருக்கிறதாம் படக்குழு.
இந்தப் படம் மட்டுமின்றி, மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் மரக்கரையர் படமும், ரஜினியுடன் தமிழில் அண்ணாத்த படத்திலும் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி **�,