மாநாடு திரைப்படத்திற்காக தன்னைத் தீவிரமாகத் தயார் செய்துவரும் சிம்புவின் வீடியோவைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் ‘மாநாடு’. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். 2019-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் சிம்பு நடிக்கவில்லை. அவர் நடித்து வந்த சில திரைப்படங்களும் படக்குழுவினருடன் ஏற்பட்ட சில கருத்துவேறுபாடுகள் காரணமாகக் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.
இந்தநிலையில் ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்பிற்கு முடிவளிக்கும் விதமாக ஜனவரி 16-ஆம் தேதி படத்தின் முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார். இந்தப்படத்தில் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டாலும் சிம்பு குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘ரசிகர்கள் குழப்பமடைய வேண்டாம். இது சிம்புவின் மாநாடு படம் தான். இதில் சிம்பு முஸ்லீமாக நடிக்கவுள்ளார். படத்தில் அவரது ரசிகர்களும் பங்காற்ற நாங்கள் ஒரு வாய்ப்பளிக்க உள்ளோம். அதன்படி படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கான பெயர்களைப் பரிந்துரை செய்யுங்கள்” என்று கேட்டிருந்தார். இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.
#maanaadu2020 pic.twitter.com/Py9kTQWe0r
— sureshkamatchi (@sureshkamatchi) January 18, 2020
இந்தநிலையில் மாநாடு திரைப்படத்திற்காக சிம்பு, உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளார்.
#maanaadu pic.twitter.com/NVvTHQycfe
— sureshkamatchi (@sureshkamatchi) January 18, 2020
ஜல்லிக்கட்டுப்போட்டியில் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறி வந்து வீரர்களை சுழற்றி எடுக்கும். இவ்வாறான வீரத்துடன் உருவாகக் காளைகள் ஒரேநாளில் தயாராவது இல்லை. பல வருட முயற்சியும் பயிற்சியும் அதற்குத் தேவைப்படுகிறது. அவ்வாறு வாடிவாசலுக்காகக் காத்திருக்கும் காளையைப் போன்ற சிம்புவின் வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
�,”