கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் -2’ படத்தை முழுமையாக முடித்துக்கொடுக்காமல், பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசித் தீர்வு காண நீதிமன்றம் இரு தரப்புக்கும் அறிவுறுத்தியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று காலை (ஏப்ரல் 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக்கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.ஆனால், அதைத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தனர். மூன்று மாதங்கள் வரை ஆகும் என்று ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டதால் இதுவரை படத்துக்கு செலவு செய்த மூலதனத்துக்கான வட்டி அதிகரிக்கும் என்பதால் ஒரு மாதத்துக்குள் இந்தியன் – 2 பணிகளை முடிக்க வேண்டுமென லைகா நிறுவனம் அழுத்தம் கொடுத்திருக்கிறது இதனால்தான் சுமுக நிலை எட்டப்படவில்லை என்று ஷங்கர் தரப்பு வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்கள் எவருடனும் இது போன்ற பஞ்சாயத்துகள் அரங்கேறியது இல்லை. படத்தயாரிப்பு என்று வந்து விட்டால் அது முழுக்க இயக்குநர் ஷங்கர் குழுவினர் கட்டுப்பாட்டில் இருக்கும். பணம் கொடுப்பது மட்டுமே தயாரிப்பாளர் கடமையாக இருக்கும். இந்த ஆதிக்கப் போக்கை முடிவுக்குக்கொண்டு வந்தது எந்திரன் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் வாங்கி தருகிறோம் எனக் கூறி ஷங்கரைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.
அதே பாணியை “எந்திரன்-2’வுக்கு லைகா கையாண்டது. அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்கிற சூழலில் தயாரிப்பு சம்பந்தமான செலவுகளை தயாரிப்பு நிறுவனமே கையாண்டது. லைகாவும் நிதி நெருக்கடியில் இருப்பதால் படம் முடிக்க தாமதமாகும் என ஷங்கர் கருதியால் தெலுங்கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் ஷங்கர். ஆனால் லைகா நிறுவனத்துக்கு உள்ள பழைய கடன்கள் சரி செய்யப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும். அதற்காகவே இந்தியன் – 2 விரைவில் முடித்து தர ஷங்கரிடம் லைகா வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஷங்கர் இந்தச் சூழலை பயன்படுத்தி கொண்டு தயாரிப்பு நிறுவனத்தைப் பழிவாங்குவதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
**-ராமானுஜம்**
.�,”