ஒரு படத்தில் பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டால் அந்த இயக்குநரின் மதிப்பு பன்மடங்கு அதிகமாகிவிடும். அதன்பிறகு, எதிர்பாராத பல திருப்பங்கள் அவர் வாழ்க்கையில் நடக்கும். அதற்கு சரியான உதாரணம் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கார்த்தி நடிப்பில் கைதி படம் கொடுத்து திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து, விஜய், விஜய்சேதுபதி என இரண்டு உச்ச நடிகர்களை களமிறக்கி மாஸ்டர் படத்தில் ஹிமாலய ஹிட்டினைப் பதிவு செய்தார்.
அடுத்த பாய்ச்சலாக, கமல்ஹாசன் நடிக்க விக்ரம் படத்தினை இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.
விக்ரம் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுக்கப் போகும் நடிகர் யாரென்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. மாஸ்டர் படத்தின் போதே மீண்டும் விஜய் – லோகேஷ் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது. அதோடு, தெலுங்கு தயாரிப்பாளரின் தயாரிப்பில் லோகேஷ் படமியக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை சந்தித்து வந்திருக்கிறார் லோகேஷ். அவருக்கு கதை ஒன்றையும் சொல்லியிருக்கிறார் லோகேஷ். அந்தக் கதைப் பிடித்துப் போக உடனடியாக இந்தப் படத்தை துவங்கிவிடலாம் என நம்பிக்கையும் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்போதைக்கு இருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி, கமல் நடிக்க விக்ரம் படத்துக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பது உறுதியாக வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
**- தீரன்**
.�,