லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகிவரும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடிப்பில் வருகிற ஜனவரி 13ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
திரையரங்குகளுக்கு 100% இருக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால், இந்த பொங்கலுக்கு எந்த சிக்கலும் இன்றி, 1,000 திரையரங்குகளில் மாஸ்டர் வெளியாக இருக்கிறது. கோவையில் வங்கி ஊழியராக இருந்து இயக்குநராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அறிமுகமான மாநகரம் இவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கைக் கொடுத்தது.அதன்பிறகு, கார்த்தி நடிப்பில் கைதி படமும் வெளியாகி பெரிய ஹிட்டானது.
கைதி பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே விஜய் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அடுத்து, மாஸ்டர் படம் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, கமல்ஹாசன் நடிக்க விக்ரம் படத்தை இயக்க ஒப்பந்தமானார். மாஸ்டர் ரிலீஸுக்குப் பிறகு, விக்ரம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் லோகேஷ் கனகராஜ். அரசியல் சார்ந்த கதைக்களமாக இருக்கும் எனவும், தேர்தலுக்கு முன்பே கமலின் விக்ரம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பல மொழிகளிலிருந்து தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜை அணுகி வருகிறார்கள். புதிய தகவல் என்னவென்றால், தெலுங்கு நடிகர் ராம் சரணிடம் அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம். ஆனால், இறுதி முடிவு எதுவும் எட்டவில்லை என்றே தெரிகிறது.
முதலில் லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்டை ஃபைனல் செய்ய வேண்டும். அந்தக் கதை ராம் சரணுக்குப் பிடித்தால் மட்டுமே கதை இறுதியாகும். கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் முடிந்தப் பிறகு ராம் சரண் படம் தொடங்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
**-ஆதினி**�,