‘லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்’ என்ற வார்த்தை இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய படத்தில் பல நட்சத்திரங்கள், பல கதைகளின் அடுக்குகள் போன்றவற்றை ஒன்றாக இணைத்து படமாக கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் லோகேஷ். இதுபோல தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு விதமான கதை சொல்லும் பாணி, படத்தில் தவறாமல் இடம் பெறும் காட்சிகள் போன்றவை இருக்கும். இது பற்றிய தொகுப்பை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
*இயக்குநர் மணிரத்தினம்*
1985-ல் ‘பகல் நிலவு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்தினம். ‘மெளனராகம்’, ‘அஞ்சலி’, ‘நாயகன்’ போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
மணிரத்தினம் ‘நாயகன்’ படத்தில் ஆரம்பித்து, ‘தளபதி’, ‘இருவர்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ராவணன்’ தற்போது ‘பொன்னியின் செல்வன்’ என இவரது பெரும்பாலான படங்கள் உண்மை சம்பவத்தையோ அல்லது வரலாற்று புதினங்களையோ தழுவி எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் இப்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மணிரத்தினத்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கு இந்த நாவலை படமாக்குவது கனவு. அதை இன்று மணிரத்தினம் சாத்தியப்படுத்தி இருக்கிறார்.
இது மட்டுமில்லாமல், மணிரத்தினம் படங்களில் மழை, ரயில், கண்ணாடி முன் நின்று பேசும் காட்சிகள் போன்றவை பெரும்பாலான படங்களில் இடம்பெற்று இருக்கும். பூஜை, நல்ல நாள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத மணிரத்தினம் இதை தன் படங்களின் செண்டிமெண்ட்டாகவே எடுத்து வருகிறார்.
*இயக்குநர் ஷங்கர்*
‘ஜெண்டில்மேன்’ என்ற வெற்றி படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் இயக்குநர் ஷங்கர். ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’ என தன் படங்களில் பிரம்மாண்டங்கள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர் ஷங்கர்.
‘பாய்ஸ்’, ‘அந்நியன்’, ‘நண்பன்’ என இவரது ஒவ்வொரு படங்களிலுமே கதையின் எதாவது ஒரு இடத்திலோ அல்லது பாடல்களிலோ பிரம்மாண்டங்களை புகுத்தாமல் விட மாட்டார். அதிலும் கடந்த 2005-ல் விக்ரம், சதா நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ படத்தின் பட்ஜெட் மட்டும் கிட்டத்தட்ட 263.8 மில்லியன். அந்த சமயத்தில் அதிக அளவு பொருட்செலவில் உருவான தென்னிந்திய படம் என்ற பதிவை இந்த படம் கைவசம் வைத்திருந்தது.
*இயக்குநர் மிஷ்கின்*
‘சித்திரம் பேசுதடி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கின். ‘நந்தலாலா’, ‘யுத்தம் செய்’, ‘துப்பறிவாளன்’, ‘சைகோ’ என இவரது பெரும்பாலான படங்களில் துப்பறியும் அல்லது சைக்கோ கதைகள் கொண்ட ஒரு வரி இருக்கும். மஞ்சள் சேலை கட்டி கொண்டு குத்து பாடலுக்கு ஆடும் பெண்கள், இரவு நேர காட்சிகள், தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்ஷியல் கதாநாயக பிம்பத்துக்குள் வராத சைக்கோத்தனமான கதாநாயகன் போன்றவை மிஷ்கின் படத்தின் சிறப்புகள்.
இவர்கள் மட்டுமில்லாமல் காஃபி ஷாப் காதல் கதைகள் எழுதும் கெளதம் மேனன், ஃபேண்டஸி உலகம் மீது பித்து கொண்ட செல்வராகவன், டார்க் ஹியூமர் படங்களுக்கு பெயர் போன நெல்சன் என ஒவ்வொரு இயக்குநர்களும் தங்களுக்கான பாணியாக ரசிகர்கள் விரும்புவதை கையாண்டு வருகிறார்கள்.
**ஆதிரா**