கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அந்த வைரஸுக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தியிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியோ, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோ இந்த போராட்டம் நடக்கவில்லை என்பதுதான் சுவாரசியமானது. ‘கோ பேக் கொரோனா’ என்று கூறியவாறே போராட்டக்காரர்கள் வைரஸுக்கு எதிராக முழங்குகிறார்கள். பலராலும் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பண்பலைத் தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகராகவும் பின்னர் கதாநாயகனாகவும் வளர்ந்தவர் நடிகர் ஆர்ஜே பாலாஜி. அவர் கதாநாயகனாக அறிமுகமான எல்கேஜி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தில் அரசியல்வாதியாக முற்படும் ஒருவர் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமாவதாக காட்சி இடம்பெற்றிருக்கும். அத்தகைய போராட்டங்களுள் மக்களின் கவனம் ஈர்ப்பதற்காக நோயை எதிர்த்து, ‘நோயே…நோயே.. ஓடிப்போ நோயே’ என்று கூறியவாறு போராட்டத்தில் ஈடுபடுவார். அதே பாணியில் இந்த கொரோனா போராட்டமும் இருக்கிறது என்பதை அந்தப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இரு வீடியோக்களையும் இணைத்து ரீல் ரியல் என்று பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்தப்பதிவு பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
Expecting some more movies from you @RJ_Balaji ????????#GoCorona…! https://t.co/djw4jG3vav
— Satish M Stats (@StatsSatish) March 11, 2020
ஆர்ஜே பாலாஜி தற்போது நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும், ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். நூறு சதவீத பக்தித் திரைப்படமாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 90’ஸ் கிட்ஸ்களைக் கவரும்படியாக இருக்கும் என ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”