�நெபோடிஸம் சர்ச்சைக்கு சுஷாந்த்தை பயன்படுத்தாதீர்கள்: இர்ஃபான் கான் மகன்!

entertainment

‘வாரிசு அரசியல் பற்றிப் பேசுவதற்கு சுஷாந்தின் மரணத்தைக் காரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று சமீபத்தில் மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன், பாபில் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) கடந்த ஜூன் 14ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுஷாந்த்தின் மரண காரணத்தைக் குறிப்பிட்டு பல்வேறு சர்ச்சைகளும் தற்போது நடந்து வருகிறது.

சுஷாந்த் நடிப்பதாக இருந்த பல திரைப்படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதும், பாலிவுட் திரையுலகில் மேலோங்கி நிற்கும் வாரிசு அரசியலும் தான் சுஷாந்தின் மன அழுத்தத்திற்கும், மரணத்திற்கும் காரணமாக அமைந்தது என்று கூறி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எதிராகவும் பிற நட்சத்திரங்கள் கருத்து கூறி வந்தனர். இது மிகப்பெரிய விவாதமாக மாறுயுள்ள நிலையில் நெபோடிஸம் பற்றிப் பேசுவதற்கு சுஷாந்தின் மரணத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்று நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

[இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://www.instagram.com/p/CBxyY3-gEAR/?utm_source=ig_web_copy_link) அந்தப் பதிவில் “இதை இன்னும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதிக ஈடுபாடு மிக்க இரண்டு மனிதர்களை நாம் இழந்துவிட்டோம். ஈடுபாட்டுடன் இருப்பதே ஆன்மீக பயணத்தின் திறவுகோல். எனவே தான் சுஷாந்த் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்ற விதம் அதிர்ச்சியளிக்கிறது. இயற்கையாகவே நாம் ஏதோ ஒரு விஷயத்தின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ பழியை சுமத்தி விடுகிறோம். ஆனால், இது பயனற்றது. ஏனென்றால் மன அமைதிக்காக அடுத்தவர் மீது பழி சுமத்துவது என்பது நேர்மையான அமைதியைத் தராது. அது ஒரு பொய்மையின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு யார் மீதும் பழி சுமத்த வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். காரணங்களை ஆராய வேண்டாம் ஏனெனில் அது இழப்பில் வாடுபவர்களை மேலும் நம்பிக்கை இழக்க செய்யும். அதற்கு பதிலாக ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்த இந்த மனிதர்களின் வளர்ச்சியை நாம் கொண்டாடி, அவர்களுடைய அறிவை நமது பயணத்தில் வெளிப்படுத்தி, அவர்களுடைய நினைவுகளின் சிறு விளக்குகளை நம்முடைய ஆன்மாக்களில் ஏற்றுவோம்.

நல்லவற்றுக்கு துணை நில்லுங்கள் ஆனால் அதற்கு சுஷாந்தின் மரணத்தை துணையாகக் கொள்ளாதீர்கள். வாரிசு அரசியலை எதிர்க்க விரும்பினால் செய்யுங்கள், ஆனால் அதற்கு சுஷாந்தை ஒரு காரணமாகப் பயன்படுத்தாதீர்கள்.” என்று பாபில் கான் குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *