தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி என்று அழைக்கப்படும் 87 வயதான பி.சுசீலா, 67 ஆண்டுகளாக சினிமாவில் பாடி வருகிறார். அவருக்கு இன்று(நவம்பர் 13) 87வது பிறந்தநாள்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில், முகுந்தராவ் – சேஷாவதாரம் தம்பதிக்கு, 1935 நவம்பர் 13 அன்று பிறந்தவர் பின்னணி பாடகி பி.சுசீலா. சிறு வயதிலேயே இவரிடம் இசை ஆர்வம் இருந்ததை கண்டு அவரது பெற்றோர், கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் விஜயநகரம் இசைக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பை படித்து அதில் முதல் வகுப்பில் தேறினார். அதற்கு முன்பே வானொலி நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த சுசீலாவிற்கு, அதே வானொலி நிலையத்தின் மூலம் சினிமாவில் பாடவும் வாய்ப்பு வந்தது. அந்நாளில் பிரபல இசை அமைப்பாளரான பெண்டியாலா நாகேஸ்வரராவ், தான் இசை அமைக்கும் புதிய படத்திற்கு புதிய குரல்களை தேடிக்கொண்டிருந்தார். வானொலி நிலையத்தில் பாடிக் கொண்டிருப்பவர்களில் சிலரை அனுப்பி வைக்குமாறு நிலையத்தாரிடம் நாகேஸ்வரராவ் கூற அவர்கள் ஐந்து பேரை அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் தான் பி.சுசீலா. 1953 ஆம் ஆண்டு நாகேஸ்வரராவ், ஜி. வரலஷ்மி நடிப்பில் பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைப்பில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படம் பெற்ற தாய். இத்திரைப்படம் தான் சுசீலாவின் திரை இசைப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
ஏதுக்கழைத் தாய் ஏதுக்கு ” என்ற பாடல் தான் இவரது முதல் திரைப்பட பாடலாகும். உடன் பாடியவர் ஏ.எம்.ராஜா. இதன் பின் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மாதச்சம்பளத்திற்கு பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். சுசீலாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை 1955-ஆம் ஆண்டு வெளிவந்த கணவனே கண்கண்ட தெய்வம் என்ற திரைப்படம் ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் அவர் பாடிய அத்தனைப் பாடல்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
”எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ,
உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே,
அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண்வளராய் என் ராஜா
ஆகிய பாடல்கள் இன்றளவும் இரவு நேரங்களில் அமைதியான சூழலில் இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடலாக இருக்கிறது.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சுசீலாவின் திரை இசை பயணத்தில் மீண்டும் ஒரு மகுடம் சூட்டியது. 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசை ஜி ராமநாதன், லீலா, ஜிக்கி, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி என்று பலர் இப்படத்தில் பாடியிருந்தாலும், சுசீலாவிற்கு கிடைத்த பாடல்கள் தனி முத்திரை பதித்தன என்றே சொல்ல வேண்டும்.
”முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே,
அன்பே அமுதே அருங்கனியே,
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
போன்ற பாடல்கள் அவரை அசைக்கமுடியாத உயரத்திற்கு கொண்டு சென்றது. இதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவின் இசையில் வந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கல்யாணப் பரிசு. இதில் மொத்தம் 8 பாடல்கள் அதில் 5 பாடல்கள் சுசீலா பாடியவை.
எம்.எஸ்.வி., பி.சுசீலா கூட்டணி 1960களின் ஆரம்பம் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையர்களின் விஸ்வரூப ஆரம்பத்திற்கு அடித்தளமிட்டது என்றே சொல்ல வேண்டும். இவர்களது இசையில் இயக்குநர் பீம்சிங்கின் இயக்கத்தில் வந்த ப வரிசைப் படங்கள் திரையிசையில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல. பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார் என்று ப வரிசைப் படங்களில் சுசீலாவின் குரலில் வந்த அத்தனைப் பாடல்களும் சாகாவரம் பெற்றவை இன்றும் இசைக் கச்சேரிகளில் இடம்பெறுகிறது.
“மலர்ந்தும்மலராத பாதி மலர்”,
“மயங்குகிறாள் ஒரு மாது”,
“அத்தான் என்னத்தான்”
“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது”,
“ஆலய மணியின் ஓசையை
நான் கேட்டேன்”
“பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்”
“யாருக்கு மாப்பிள்ளை யாரோ”,
“கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடியசைந்ததா”
என்று சொல்லிக் கொண்டே போகலாம்.1968 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் சுசீலா பாடிய
”நாளை இந்த வேளை பார்த்து
ஓடி வா நிலா”
என்ற பாடலுக்காக அந்த ஆண்டு சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றார். 1970களின் பிற்பகுதியில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப்பின் அடுத்த தலைமுறை கலைஞர்கள் திரைத்துறையில் கால்பதித்த காலம். இந்த காலகட்டங்களில் சுசீலாவின் பாடல்களின் எண்ணிக்கை முன்பிருந்த அளவு இல்லை என்றாலும் இளையராஜாவின இசையிலும் ஏராளமான பாடல்களை பாடியிருக்கின்றார்.
இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில்,
”சொந்தமில்லை பந்தமில்லை
பாடுது ஒரு பறவை”
என்ற பாடலை அவரது இசையில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து அவரது இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறார்.
”கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை”
”டார்லிங் டார்லிங் டார்லிங்
ஐலவ்யூ ஐ லவ் யூ”
”ராசாவே உன்ன காணாத
நெஞ்சு காத்தாடி போல ஆடுது”
”காலைத் தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம்”
”நிலா காயுதே நேரம்
நல்ல நேரம்”
“முத்துமணி மாலை உன்ன
தொட்டு தொட்டு தாலாட்ட”
என்று இவர் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றும் தலைமுறை கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகிறது.
”கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு”
”கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு”
என்று மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் பாடி தனக்கு வயதானாலும் தன் குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.
**அம்பலவாணன்**
�,”