|சசிகுமார் இயக்கத்தில் வரலாற்று நாயகனாக விஜய்

entertainment

நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் வரலாற்று திரைப்படம் ஒன்றை இயக்க தான் திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்‘மாஸ்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் எந்த இயக்குநருடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இயக்குநர்கள் சுதா கொங்கரா, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டவர்கள் அவரிடம் கதை கூறி இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலா வந்தன. எனினும் இந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் இயக்குநர் சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு சரித்திர கதையை தான் விஜய்யிடம் கூறியிருப்பதாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் கலந்துகொண்ட நேரலைப் பேட்டியில் இந்தத் தகவல்களை அவர் கூறியுள்ளார். சசிகுமார் நடித்த பல திரைப்படங்களில் அவருக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர் சத்யா, இவர் தெறி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பேட்டியில், ‘வரலாற்றுக் கதையில் நடித்து அத்தகைய உடைகளை அணிய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா?’ என்று சத்யா கேட்ட கேள்விக்கு, “எனக்கு ஆசையில்லை. ஆனால், ஒரு வரலாற்றுக் கதையை தயார் செய்து வைத்திருக்கிறேன்.” என்று சசிகுமார் கூறினார்.

அதற்கு சத்யா, “உங்கள் அனுமதியுடன் இதை நான் கேட்கிறேன். அந்தக் கதையை நீங்கள் தளபதிக்காக எழுதியிருந்தீர்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். ‘தெறி’ படத்துக்காக நானும் விஜய் சாரும் கோவாவுக்குச் சென்றோம். அப்போது, கோவா ஏர்போர்டில் வைத்து ‘சசிகுமார் சாருடன் ஒரு படம் பண்றீங்களாமே’என்று அவரிடம் கேட்டேன். அவரும், ‘ஆமாம் நண்பா.. பேசிட்டு இருக்கோம். பார்ப்போம்’ என்றார். நான் விஜய் சாருடன் பணிபுரிந்து விட்டேன். ஆனால் அந்தப் படத்திற்காக இதுவரைக்கும் பார்க்காத விஜய் சாரை ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தீர்கள். அவருக்காக வடிவமைக்கப்பட்ட உடையின் புகைப்படத்தை என்னிடம் காண்பித்தீர்கள். யாருமே விஜய் சாரை அப்படியொரு உடையில் பார்த்திருக்கவே முடியாது. அதைப் பார்த்தபோது உள்ள பிரமிப்பு இன்னும் எனக்கு இருக்கிறது. அது சாத்தியமாகுமா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சசிகுமார் **“ஆகலாம். ஆகாது என்று சொல்ல முடியாது. ஒரு கதை பேசி பண்ணலாம் என்று திட்டமிட்டோம். வேறு சில காரணங்களுக்காக அது நடைபெறவில்லை. பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் அதிகமாக இருந்தது. கதையைக் கேட்டு அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வரும் காலத்தில் கண்டிப்பாகப் பண்ணுவோம்”** என்று தெரிவித்துள்ளார்.

புலி திரைப்படத்திலும், வேறு சில திரைப்படங்களின் பாடல் காட்சிகளிலும் சரித்திர நாயகனாக தாங்கள் பார்த்து ரசித்த விஜய்யை மீண்டும் வரலாற்று உடையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0