ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன்-2’ படம் மட்டுமே கமல் நடித்து வரும் படம். ‘சபாஷ் நாயுடு’கைவிடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருக்கிறது.
எப்போது படப்பிடிப்பைத் தொடங்க அரசு அனுமதிக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே ‘தலைவன் இருக்கின்றான்’ என்கிற படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப்படம் உருவாகும் , அதோடு இந்தப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.
ஆனாலும், இந்தப்படத்தைத் தயாரிப்பதில் லைகா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. கமலுடன் ஒப்பந்தம் போட்டு பெரும்தொகை கொடுத்திருந்த போதும் இப்படத்தைத் தொடர அந்நிறுவனம் விரும்பவில்லை. கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்த பின் சினிமா தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் வடிவம் எந்த மாதிரியாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலையில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக லைகா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தொடக்கத்தில் இதனால் அதிர்ச்சியடைந்த கமல், இப்போது இப்படத்தைத் தயாரிக்க யாரும் வரவில்லையென்றாலும் தானே தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்த காரணத்தால் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ரஹ்மான் இருவருடனும் வெவ்வேறு நாட்களில் இணையதளம் மூலம் வீடியோ உரையாடலை கமல் நடத்தினார். இதன்மூலம் ‘தலைவன் இருக்கின்றான்’ படம் தயாரிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார் என்பதுடன், அப்படத்தைத் தயாரிக்க தேவைப்படும் முதலீட்டை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிக்கும் இது பயன்படுத்தபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.
**-இராமானுஜம்**�,