Tமுதல்வருக்கு பாரதிராஜா கடிதம்!

Published On:

| By Balaji

பொதுமுடக்கம் காரணமாக தமிழ் சினிமா சந்தித்துவரும் இன்னல்களைக் குறிப்பிட்டு இயக்குநர் பாரதிராஜா தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கொரோனாவும், லாக்டவுனும் தமிழ் சினிமாவை பெரிதும் பாதித்துள்ளது. இரண்டு மாதகாலமாக படப்பிடிப்புகள் நடத்தாமல் இருப்பதால் திரையுலகில் ஏராளமானவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு 60 பணியாளர்களுடன் சின்னத்திரைப் படப்பிடிப்புகளைத் தொடர தமிழக அரசு அனுமதி அளித்த போதும் திரைப்படப் படப்பிடிப்புகள் குறித்து எவ்வித உத்தரவும் இதுவரைப் பிறப்பிக்கப்படவில்லை. எனவே மீண்டும் திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு திரையுலகினர் பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “முதல்வர் அவர்களுக்கு, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்.

அதே சமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

முதல்வர் அவர்கள் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும்.

திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share