தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் T.G.தியாகராஜன் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் தெற்கு பிராந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகிறபோது, “பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தொழில்துறையின் வளர்ச்சிக்கான பணிகளை செய்து வரும் அமைப்பே CII. இந்த ஆச்சரியமான செய்தி திடீரென்று வந்துள்ளது. CII எனக்கு அளித்துள்ள இந்த கௌரவம் குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தற்பொழுது பிற தொழில் துறைகளைப் போலவே திரைத்துறையும் ஒரு மாபெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இத்தகைய சிக்கலான காலகட்டத்தில் இப்படியான புதிய பொறுப்பை நான் பெற்றுள்ளதால் எனக்கு சவாலான பணிகள் காத்துள்ளன.
திரைப்படத் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் பல ஆண்டுகள் தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்த எனக்கு கிடைத்துள்ள அனுபவத்தினால் இப்புதிய பணியில் நான் வெற்றியை அடைவேன் என்று நம்புகிறேன். 125 வருட பாரம்பரியமிக்க CII-இன் ஒரு பகுதியாக இருப்பதே ஒரு சிறப்புமிக்க கௌரவமாகும். என்னால் இயன்ற வரை இப்பதவிக்கு கௌரவத்தை சேர்க்க நான் முயற்சி செய்வேன்” என்கிறார் தியாகராஜன்.
இவர் தமிழில் பல்வேறு மெகா சின்னத்திரை தொடர்களையும் தென்னிந்திய மொழிகளில் 40 படங்களை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ பட நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி மற்றும் சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ள பல்வேறு வெற்றிப்படங்கள் இவற்றில் அடங்கும். சினிமாவில் இவருக்கான குரு இவரது தந்தை ‘வீனஸ்’ T.கோவிந்தராஜன், இந்தி உள்ளிட்ட ஆறு இந்திய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து தேசிய விருது வென்ற திரைப்படத் தயாரிப்பாளர்.
சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த படங்கள் மூலம் அவருக்கு மூன்று தேசிய விருதுகளும் 20 மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கௌரவ செயலராகவும் சில ஆண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார். தென்னிந்திய சின்னத்திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.
**-இராமானுஜம்**�,