அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நாயகனாக நடித்து வரும் படம் டிக்கிலோனா.
இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘நட்பே துணை’ புகழ் அனகா, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், அருண் அலெக்ஸாண்டர் ஆகியோர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசைக்கு அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் ஃபேக்டரி சார்பில் சினிஸும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். பெரிய நட்சத்திரப் பட்டாளமும் ஆகச்சிறந்த தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சந்தானத்துக்கு மூன்று வேடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மூவரும் ஒரு பாடலில் இடம் பெறுவது போலக் காட்சியமைத்திருக்கின்றனர். அந்தச் சூழலுக்கு மிகப்பொருத்தமான பாடல் காட்சியை பழைய தமிழ்
படங்களில் தேடிய போது 1990ல் வெளிவந்து வெற்றி பெற்ற ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்” எனும் பாடல் கிடைத்திருக்கிறது.
அந்தப்பாடலில் குஷ்புவோடு மூன்று கமல்கள் வருவார்கள் எனவே அந்தப்பாடலின் உரிமையை இளையராஜாவிடமிருந்து முறைப்படி விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். வாலி எழுதிய அந்தப்பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் அப்போது பாடியிருந்தார்கள்.
அந்தப்பாடலை அப்படியே பயன்படுத்தாமல், அதே மெட்டில் புதிய குரல் பதிவு செய்து ‘டிக்கிலோனா’ படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார்களாம்.
கமல் நடித்து அவரது ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் பாடலின் மறுபதிப்பில் மூன்று சந்தானங்கள் இடம்பெறுவது சந்தானத்திற்கு பெருமை. அப்பா இளையராஜா இசையமைத்த பாடலுக்கு 22 வருடம் கழித்து மகன் யுவன் சங்கர் ராஜா புதிய மெட்டமைப்பது சாதனையாக
கருதப்பட்டாலும், மூலப் பாடலுக்கு சேதாரமில்லாமல் பெருமை சேர்க்க வேண்டிய கடமை யுவனுக்கு உள்ளது.
**-இராமானுஜம்**�,”