ஹர்பஜனின் ‘ஃப்ரெண்ட்ஷிப்’: கொண்டாடும் ரஜினி, சிம்பு ரசிகர்கள்!

Published On:

| By Balaji

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஃப்ரெண்ட்ஷிப்’. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாகக் களமிறங்குகிறார். இவர்களுடன் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகர் சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹர்பஜன் சிங், லாஸ்லியா இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 4) படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. ‘சூப்பர் ஸ்டார் ஆந்த்ம்’ என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்துக்கு சமர்ப்பிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை தீவிர ரஜினி ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். டி.எம் உதயகுமார் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடல் வரிகளை கெளதம் எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடல் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங், ‘மொத்த பேட்டையோட ஒரே தலைவன் ரஜினிகாந்துக்கு என் ட்ரிபியூட் இந்த சூப்பர் ஸ்டார் ஆந்த்ம். STR மாஸ் மாமா’ என்று பதிவிட்டுள்ளார்.

***அடிச்சு உதைச்சு ஓடவிடும் மாசுக்குத் தலைவன்***

***அவர் அழுது உருகிக் கலங்கடிக்கும் கிளாசுக்குத் தலைவன்***

***ஸ்டைலுக்கு அஸ்திவாரம் போட்டது தலைவன்***

***பஞ்ச் டயலாக்கில் ஓடவிடும் பாசத் தலைவன்***

***சிரிக்கும் சிங்கிள் சிங்கம்டா.. முறைச்சா நீயும் பங்கம்டா***

***குழந்தை முகம் பாருடா.. அவர்தான் வேறு யாருடா***

***சூப்பர் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார்.. ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்***

என்று சிம்புவின் குரலில் ரஜினியை வர்ணிக்கும் வரிகளுடன் அமைந்துள்ள இந்தப்பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

**- இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share