பிரபாகரனுக்கு ஜெ.அன்பழகன் உதவி செய்தாரா?: அமீர் விளக்கம்!

Published On:

| By Balaji

பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உதவி செய்தார் என்று இயக்குநர் அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவர் பேசியது பல்வேறு விவாதங்களுக்கும் காரணமானது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ஜூன் 10ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் பாதிப்படைந்து பலியான முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வருத்தமான பெயரைப் பெற்ற ஜெ. அன்பழகனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

அவரது மறைவு குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் இரங்கல் செய்தி வெளியிட்டதுடன், ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருந்தார். அவ்வாறு பேட்டி ஒன்றில் பேசும் போது, ‘மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இருந்த தேசியத் தலைவர் பிரபாகரன், பிணையில் இருந்து வெளியே வந்த போது தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்ததாகவும் அப்போதே அவரை தான் பார்த்ததாகவும், அவரிடம் பேசியதாகவும் அவரைப் பற்றி பெருமையாக ஜெ.அன்பழகன் தன்னிடம் சொன்னார்’என்றும் சில தகவல்களை அமீர் பகிர்ந்திருந்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உதவி செய்தார் என்று அமீர் கூறிய தகவல்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகவும், அவர் வரலாற்றைத் திரிக்கப் பார்க்கிறார் என்றும் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் சொன்ன தகவலில் உண்மை இல்லை என்றும், அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த வழக்கில் பிரபாகரன் அவர்களை ஜாமீனில் எடுத்தது கே.எஸ். ராதாகிருஷ்ணன் ( திமுகவின் செய்தி தொடர்பாளர் ) அவர்களும் அதன் பின்னர் அவரோடு தொடர்பில் இருந்தது ஐயா பழ.நெடுமாறன் மற்றும் இன்ன பிற சிலர் தான் என்கிற தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் அந்த சம்பவத்தில் கே. எஸ். ராதாகிருஷ்ணன், ஜெ. அன்பழகன் போன்றோர் உடன் இருந்ததாகவும் அன்றைய 116 வட்ட பகுதி செயலாளராக இருந்த து.ச.இளமாறன் மற்றும் அவரது சகோதரர் சந்திரன் இருவரும் ஜாமீன் கையெழுத்திட்டதாகவும் திமுகவின் கோ.அய்யாவு போன்றோரும் உடன் இருந்தனர் என்கிற தகவலும் இன்னொரு புறம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்த வழக்கின் பிண்ணனியில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் செயல்பட்டிருக்கிறார் என்கிற தகவல்களும் எனக்கு அலைபேசியின் வழியே வந்து சேர்ந்திருக்கிறது.

எதுவாயினும் தேசிய தலைவர் பிரபாகர் அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் பிணையில் எடுக்கப்பட்டது குறித்தும் பல்வேறு உண்மைத் தகவல்கள் ஆதாரங்களுடன் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதே நேரத்தில் இணைய தள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு குறித்த விவாதங்கள் அரசியல் விவாதங்களாக மாறி மாபெரும் சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து அண்ணன் ஜெ.அன்பழகன் என்னிடம் பேசியது உண்மை. நான் கேட்டதும் உண்மை. அதற்கு மறைந்த அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களும் இறைவனுமே சாட்சி. அந்த செய்தியை நான் பகிர்ந்ததில் சிறு தவறு நிகழ்ந்திருக்கலாமே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் அரசியலும் கிடையாது.

வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை அது போன்ற செயல்களில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share