விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான ‘பிகில்’ திரைப்படம் 20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலா வருகின்றன. இது குறித்துப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் நயன்தாரா, யோகி பாபு, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிலீஸ் நேரத்தில் பிகில் 300 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டபோது பிகில் வசூல் விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ‘பிகில் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஏற்படுத்தித் தரவில்லை எனவும், அதன் மூலம் அவர்களுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம்’ ஏற்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் ரிபப்ளிக் டிவி நிறுவன இணையதளத்தில் வெளியானது. இது தொடர்பாகப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா பேட்டி ஒன்று அளித்திருப்பதாகவும், ஃபுட்பால் காட்சிகளுக்காகவே அதிக செலவானது என்றும் அந்த ஊடகத்தில் தெரிவித்திருந்தனர். .
இதைத் தொடர்ந்து ‘தான் அத்தகைய பேட்டி எதுவும் அளிக்கவில்லை’ என்றும், ‘விஜய் படத்தால் நஷ்டம் எனப் பரவி வரும் தகவல் பொய்யானது’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”