நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பல் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை பூர்ணா. தமிழில் அவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சவரக்கத்தி, வேலூர் மாவட்டம், ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷம்னா காசிம் என்ற இயற்பெயர் கொண்ட அவர், அந்தப் பெயரிலேயே மலையாள சினிமாவில் அறியப்படுகிறார். கடந்த ஜூன் 24 ஆம் தேதி பூர்ணாவின் தாயார் ரவுலா தனது மகளை நான்கு பேர்மிரட்டுவதாகக் கூறி கொச்சி மாவட்டத்தில் உள்ள மராடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து குற்றாவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான சர்ச்சைகள் ஊடகங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை பூர்ணா இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
**குற்றவாளிகளோடு தொடர்புபடுத்த வேண்டாம்**
அவர் தனது அறிக்கையில், “இந்த இக்கட்டான சூழலில் எனக்கு ஆதரவளித்த எனது அன்பிற்குரிய நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது நன்றிகள். எனது வழக்கு தொடர்பாக சில ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது பற்றி நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த மிரட்டல் கும்பலைக் குறித்தும், முக்கியக் குற்றவாளிப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அந்த குற்றவாளியோடு என்னைத் தொடர்புபடுத்தி தயவுசெய்து செய்தி வெளியிட வேண்டாம் என்று ஊடக நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.
போலியான பெயர்கள், போலியான முகவரிகள் மற்றும் போலி அடையாளங்களை வைத்துக் கொண்டு எங்களிடம் திருமணம் குறித்துப் பேசி அவர்கள் எங்களை ஏமாற்றியதால் எங்கள் குடும்பத்தினர் அவர்கள் மீது புகார் அளிக்க முடிவு செய்தனர். நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தோம். அதனால் அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டோம். அவர்களின் நோக்கம் என்ன என்று எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, இப்போதும் தெரியவில்லை.
**சக சகோதரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள்**
இப்போது, என்னுடைய புகாரை ஏற்று கேரள காவல்துறையினர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். எனவே, விசாரணை முடியும் வரை என்னுடைய மற்றும் எனது குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய குற்றவியல் நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு முடிந்ததும் ஊடகங்களை நிச்சயமாக சந்திக்கிறேன். என் வாழ்வின் மிகவும் கடினமான ஒரு கட்டத்தில் எனக்கு ஆதரவளித்து உறுதுணையாக நின்ற என் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் மீண்டும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் வழக்கின் மூலமாக எனது சக சகோதரிகள் இதுபோன்ற மோசடிக்காரர்கள் இடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
**இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு**
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நடிகை பூர்ணாவை கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததாக வழக்கை விசாரிக்கும் ஐஜி விஜய் சாக்கரே தெரிவித்துள்ளார். இந்த குற்றவாளிகள் ஏற்கனவே மலையாள சினிமாத்துறையை சேர்ந்த மற்ற சில நடிகர் நடிகைகளையும் தங்கள் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஹைதராபாத்தில் இருந்து வழக்கின் விசாரணைக்காக கொச்சிக்கு வந்த நடிகை பூர்ணா அவரது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். எனவே வழக்கு விசாரணை வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை தொடர்பாக எட்டு பேரை காவலர்கள் கைது செய்திருக்கின்றனர்.
நடிகை பூர்ணாவின் மொபைல் எண்ணை மற்றொரு மலையாள நடிகர் தந்ததாகவும் குற்றவாளிகள் கூறியுள்ளனர். ஆனால் அவர் யார் என்பது குறித்து போலீஸ் இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஏற்கனவே இந்த குற்றவாளிகள் மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் தர்மஜனை தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம் தாங்கள் தங்கக் கடத்தல் செய்பவர்கள் என்று கூறி நகை கடத்தலுக்கு உதவி செய்தால் இரண்டு கோடி ரூபாய் பணமும், ஆடம்பரக்காரும் தருவதாகக் கூறியுள்ளனர்.
இதே கும்பல் தங்களைக் கடத்தி பணம் பறித்ததாக மாடலிங் செய்யும் 8 பெண்கள் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தனர். இதில், சிலரை தங்கக் கடத்தலிலும் இந்த கும்பல் ஈடுபடுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”