தாய் எலியின் பாசப்போராட்டம்: சிலிர்க்க வைத்த வீடியோ!

entertainment

கனமழை காரணமாக வளைக்குள் தண்ணீர் புகுந்து, தத்தளித்து வந்த தனது குட்டிகளை மீட்க தாய் எலி நடத்திய பாசப்போராட்டம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இந்த உலகில் அம்மாவை விட பெரிய சக்தி எதுவும் இல்லை’, ‘தாயை விட சிறந்த உறவும், தாய்பாசத்தை மிஞ்சும் உன்னத உணர்வும் வேறெதுவும் இருக்க முடியாது’ என தாய்மையின் பெருமையை விளக்கும் பல வசனங்களை திரைப்படங்களிலும், நடைமுறை வாழ்க்கையிலும் நாம் பலமுறை கேட்டிருப்போம். தான் பெற்ற குழந்தை ஆபத்தில் இருக்கும்போது எத்தனை இன்னல்கள் வரினும், அதையெல்லாம் கடந்து ஒரு தாய் தன் குழந்தையை மீட்டெடுப்பாள் என்று கூறப்படுவது, வெறும் வசனங்கள் மட்டுமல்ல. அந்த வார்த்தைகள் மனிதர்களை மட்டும் குறிப்பிடுவதும் அல்ல. ஐந்தறிவு ஜீவனாக இருந்தாலும் தன் குழந்தைகளை காப்பாற்றப் போராடும் தாய் விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதைப் பார்த்து நாம் நெகிழ்ந்திருப்போம்.

அந்த வகையில், மழை நீரில் சிக்கித் தவித்த எலிக் குஞ்சுகளை அதன் தாய் எலி காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. திருப்பூரில் கடந்த சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. திடீரென பெய்த கனமழையால் சாலையெங்கும் தண்ணீர் தேங்கி ஓடியதுடன், அங்கிருக்கும் சாக்கடைகளும் நிரம்பி வழிந்தது. அந்த நேரத்தில் மழைநீர் அங்கிருக்கும் எலி வளைக்குள் புகுந்துள்ளது. அந்நேரம் அதில் இருந்த பிறந்து சில நாட்களேயான எலிக்குஞ்சுகள் தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடியது.

அதைப்பார்த்த அவற்றின் தாய் எலி வழிந்தோடும் தண்ணீரில் தனது உயிரையும் மதிக்காமல் மூழ்கி சென்று வளைக்குள் இருந்த ஒவ்வொரு குஞ்சுகளாக எடுத்து வந்து அருகில் இருக்கும் நடைமேடையில் வைத்தது . இவ்வாறாக உயிரைப் பணையம் வைத்து தனது ஐந்து குஞ்சுகளை தாய் எலி காப்பாற்றியது. இந்த சிலிர்க்க வைக்கும் காட்சியை அதைப் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். உருகவைக்கும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் எலியின் தாய்ப்பாசத்தைப் போற்றி இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0