கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துவிட்டதைத் தொடர்ந்து சீனாவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
2019ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி மக்களை முடக்கி வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் 26 ஆவது இடத்தில் இருக்கும் சீனாவில் இதுவரை 83,693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 4,634 பேர் இதன் காரணமாக மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் புதிதாக ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவரவில்லை. அதனைத் தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். அந்தவகையில் நீண்ட நாட்களாக மூடியே இருந்த திரையரங்குகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்ஃபூ, குய்லின் போன்ற பகுதிகளில் முதற்கட்டமாக நேற்று(ஜூலை 20) திரையரங்குகள் திறக்கப்பட்டன.
பார்வையாளார்கள் அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு, ஒன்றிடைவிட்ட இருக்கைகளில் அமர்ந்து திரைப்படம் பார்த்தனர். திரைப்படம் முடிந்து அனைவரும் வெளியேறியதும், திரையரங்கம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
this weekend. Go !
— yana0329 (@yyyyyyyyyana) July 20, 2020
அடுத்ததாக கான்ஃபரன்ஸ்கள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஒவ்வொன்றாகத் திறந்து வைக்க சீனா திட்டமிட்டுள்ளது. மாஸ்க் அணிந்தவாறு, தகுந்த சமூக இடைவெளியுடன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சீனா தயாராகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இதுவரை உலகம் முழுவதுமுள்ள 1,48,52,700 மக்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 89, 06,690 பேர் அதிலிருந்து மீண்டு, குணம் பெற்றும் வந்துள்ளனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”